அசாமிய மொழியில் பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானவர் ஜுபீன் கார்க். மேலும் பெங்காலி மற்றும் இந்தி உட்பட 40 மொழிகளில் பாடியுள்ளார். பாடுவதை தாண்டி கிட்டார், டிரம்ஸ், தபேலா உள்ளிட்ட 12 இசைக்கருவிகளை வாசிக்கும் திறமையாளராக இருந்துள்ளார். அசாமிய பாடகர்களில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய பாடகராக இருந்து வந்தார். இதைத்தாண்டி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வந்துள்ளார். 2006ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘கேங்ஸ்டர்’ படத்தில் இவர் பாடிய ‘யா அலி’ பாடல் பெரும் ஹிட்டடித்தது. இதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்து பிரபலமானார்.
சிங்கப்பூரில் கடந்த 20 மற்றும் 21ஆம் தேதியில் நடக்கவிருந்த நான்காவது வடகிழக்கு இந்திய விழாவில் பாடுவதற்காக அதற்கு சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். ஆனால் அங்கு ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டிருந்த அவர் முதலில் மூச்சு திணறலால் சிரமப்பட்டுள்ளார். பின்பு அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை சோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவரது மறைவு வட இந்திய இசைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது மறைவையொட்டி அசாம் மாநிலத்தில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் 6 ஏக்கர் நிலபரப்பில் நினைவிடம் அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததாக் இங்கும் இரண்டாவது முறை உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்பு அவரது உடலுக்கு பாரம்பரிய 'அசாமிய கமோசா' துணி போர்த்தப்பட்டு, இறுதிச் சடங்குக்காக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இதனால் அப்பகுதியே ஸ்தம்பித்து போனது.
அடுத்து கவுஹாத்தி நகரில் உள்ள அர்ஜுன் போகேஸ்வர் பருவா விளையாட்டு மைய கட்டிட வளாகத்தில் அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அவரது பிரபல பாடலான மாயாபினி பாடலில் இருந்து சில வரிகளை அங்கு இருந்த மக்கள் பாடினார்கள். அசாமின் அடையாளமாக திகழ்ந்த அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.