Skip to main content

ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

 

yuvraj singh with father yograj joins kamal in indian 2 movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரு வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த வாரம் ஆர்.சி 15 படப்பிடிப்பையும் ஷங்கர் படமாக்கி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (01.11.2022) தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் நடிகருமான யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை யோக்ராஜ் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் எல்லா ஹீரோக்களின் மேலும் பெரிய மரியாதை உள்ளது. என்னை மேலும் அழகாக்கிய ஒப்பனையாளர்களுக்கு நன்றி. லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

யோக்ராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆறு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். பின்பு கிரிக்கெட்டிலிருந்து விலகி பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.