
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித், தற்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். நீண்ட காலமாக அவர் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ‘மார்கழியின் மக்களிசை’ எனும் இசை விழாவை நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த வருடமும் நேற்று (28.12.2022) தொடங்கிய இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இன்று நடந்த நிகழ்வில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் விரைவில் பா.ரஞ்சித்துடன் இணைந்து படம் பண்ண விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு ரஞ்சித்தும் ஓகே சொல்லியுள்ளார். எனவே விரைவில் பா.ரஞ்சித் - யுவன் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உறுதியாகும் பட்சத்தில் இருவரும் முதன் முறையாக இணைந்து பணியாற்றவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா தற்போது 'ஏழு கடல் ஏழு மலை', 'கஸ்டடி' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார்.