
யுவன் ஷங்கர் ராஜா, 1997-ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். முக்கியமாக இவரது பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் யுவன், திரைத்துறையில் 25 ஆண்டுகளைக் கடந்து பயணித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்புதான் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இப்போது லத்தி, லவ் டுடே உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாகக் கூறி தனது பெயரை அப்துல் ஹாலிக் என்று மாற்றிக் கொண்டார். இருப்பினும், திரைத்துறையில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்தி வருகிறார். பின்பு 2015ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஷஃப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு 'உம்ரா' என்ற புனிதப் பயணத்தை யுவன் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா அணிந்திருக்கும் உடையின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.