yuvan about vijay the goat response

இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய், விரைவில் சினிமா வாழ்கைக்கு முழுக்கு போடவுள்ளார். அதற்கு முன்னதாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு பிறகு வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். கடந்த பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த விஜய், கட்சிக் கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது.

இந்த சூழலில் அரசியல் வருகைக்கு பிறகு முதல் படமாக இன்று வெளியாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் படத்தைக் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். இவர்களோடு திரை பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியில் பங்கேற்று படத்தை கண்டுகளித்தனர். மேலும் பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் எக்ஸ் தளத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மக்களே. தளபதி மேல் என்னுடைய அன்பை காட்ட இந்த படம் மூலம் வாய்ப்பளித்த அர்ச்சனா, ஐஸ்வர்யா, அகோரம் சாருக்கு நன்றி. மேலும் என்னுடைய அன்பு சகோதரர் வெங்கட் பிரபு இல்லாமல் இது நடந்திருக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் படத்திற்கு இரண்டாவது முறையாக இசையமைத்துள்ளார். முன்பு புதிய கீதை படத்தில் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.