தமிழை தாண்டி பல்வேறு இந்திய மொழிகளிலும் யோகி பாபு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் ‘குர்ராம் பாபி ரெட்டி’ மற்றும் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் ‘குர்ராம் பாபி ரெட்டி’ படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் நரேஷ் அகஸ்தியா, ஃபரியா அப்துல்லா, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேணு சத்தி, அமர், ஜெயகாந்த் உள்ளிட்ட மூன்று பேர் இப்படத்தை தயாரிக்க கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

காமெடி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா, ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் படக்குழுவினருடன் யோகி பாபுவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் எல்லாருக்கும் நன்றி. பட சக்சஸ் மீட்டில் தெலுங்கு சரலமாக பேசுகிறேன். அதற்குள் கத்துக்குறேன். என்னுடைய நிறைய படங்கள் இங்கு ரிலீஸாகிறது. இப்போ கூட விஜய் சேதுபதி நடிச்ச ‘சார், மேடம்’ தெலுங்கில் டப் பண்ணி ரிலீஸாகியிருக்கிறது” என்றார். பின்பு ஆடியன்ஸை பார்த்து “தமிழில் பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க, எனக்கு தமிழ் தான் வரும். சீக்கிரமா சக்சஸ் மீட்ல தெலுங்கு பேசுகிறேன்” என்றார். 

அடுத்து பிரம்மானந்தம் பேசுகையில், பட அனுபங்களை பகிர்ந்தார். அப்போது யோகி பாபு குறித்து பேசுகையில், “இந்த படத்தில் யோகி பாபு இருப்பது சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் நான் அவருடன் ஒரு கன்னட படத்தில் நடித்தேன். ஆஃப் ஸ்க்ரீனில் அவர் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவரது காமெடி டைமிங் சிறப்பாக இருக்கும்” என்றார்.