“மைக்கை ஆஃப் பண்ணிட்டு வெளியே வா...” - சொடக்கு போட்ட யோகி பாபு  

yogi babu press meet issue

நகைச்சுவை கதாபாத்திரம் முதன்மை கதாப்பாத்திரம் எனப் பிஸியாக நடித்து வருபவர் யோகி பாபு. அந்த வகையில் முதன்மை கதாப்பாத்திரத்தில் தற்போது நடித்துள்ள படம் போட். இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ள நிலையில் கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபா பிரேம்குமார் மற்றும் சி.கலைவாணி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாவதை ஒட்டி, படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிம்பு தேவன், கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் யோகி பாபு தாமதமாகவந்திருந்தார். அது குறித்து பத்ரிக்கையாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, “நேற்று முன் தினம் குற்றாலத்தில் ஷூட்டிங்கில் இருந்தேன். இந்தப் பட பிரொமோஷனுக்காக 10 மணி நேரம் காரில் ட்ராவல் பண்ணி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எல்லா கம்பெனியிலும் எல்லாரும் எல்லா நேரங்களிலும் அட்ஜெஸ்ட் பண்ணமாட்டார்கள். இது போல் என்னுடைய சூழ்நிலையைச்சொல்லிவிட்டேன். ஹீரோயினுக்கு இன்னும் மூணு நாளில் கல்யாணம் ஆகப்போகிறது. அதனால் சீக்கிரம் போக வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். உடனே அவர்களோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை அனுப்பிவைத்தோம். அதனால் யாரும் என்னைத்தப்பாக நினைக்க வேண்டாம். எப்பவுமே உங்க சப்போர்ட் எனக்கு வேண்டும். ரொம்ப நன்றி” என்றார்.

பின்பு அவரிடம், “நீங்கள் 6 மணி என்று சொன்னீர்கள். ஆனால் 3 மணிநேரம் கழித்து 9 மணிக்கு வந்துள்ளீர்கள்” எனப் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு நிகழ்ச்சி குறித்து எந்த நேரமும் சொல்லவில்லை. நான் முன்கூட்டியே என்னுடைய சூழ்நிலையைச் சொல்லிவிட்டேன். நான் காரில் வருவதால் ஒவ்வொரு சிக்னலிலும் போய் கேட்க முடியாது. உங்க கோவம் எனக்கு புரிகிறது. அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார். பின்பு மேடையை விட்டு கீழே இறங்கிய யோகி பாபுவிடம், “நடிகர் சங்க தலைவராக போவதாக ஒரு தகவல் வருகிறதே” எனப் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, உடனடியாக நின்ற யோகி பாபு சிரித்த படி, கேள்வி கேட்டவரை நோக்கி, சொடக்குப்போட்டு, “மைக்கை ஆஃப் பண்ணிட்டு வெளியே வா.. நான் பதில் சொல்றேன்” என்றார். இது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor yogi babu
இதையும் படியுங்கள்
Subscribe