Skip to main content

திடீரென கல்யாண வயசு வந்த கதை! - யோகி பாபு தந்த மோட்டிவேஷன் 

‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சுடீ’ என்று நயன்தாராவை பார்த்து யோகி பாபு பாடும் பாடல், முரட்டு சிங்கிள்ஸ் 'எங்களுக்கு வயதாகிவிட்டது சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க' என்று வீட்டில் பேச ஒரு ஆயுதமாகப் பயன்பட்டது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு டீக்கேடுக்கும் ஒரு நடிகர் முன்னணி காமெடி நடிகராக வலம் வருவார். அந்த வகையில் இந்த 2K கிட்ஸ் டீக்கேடின் முன்னணி காமெடி நடிகர், நாயகராக இருப்பவர் யோகி பாபு.
 

yogi babu

 

 

தற்போதைய சூழலில் யோகி பாபு நடித்த படங்கள் என்று லிஸ்ட் போடுவதை விட நடிக்காத படங்கள் என்று லிஸ்ட் போட்டால்தான் சின்ன லிஸ்ட்டாக வரும். லோ பட்ஜெட்டில் தொடங்கி, ஹை பட்ஜெட் வரை... தளபதி, தல, சூப்பர் ஸ்டார் என்று உச்ச நட்சத்திரங்கள் படங்கள் என்று அனைத்திலுமே தவிர்க்க முடியாதவராக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர் யோகிபாபு. கடைசியாக வெளிவந்த 'தர்பார்' படத்தில் சூப்பர் ஸ்டாரையே இவர் கலாய்த்தது எல்லாம் நம்மை கோபப்படுத்தாமல் ரசிக்க வைத்தது. 2009 இல் 'யோகி' படத்தில் அறிமுகமான பாபு 'யோகி' பாபுவானார். 2012இல் வெளிவந்த சுந்தர்.சியின் 'கலகலப்பு' படத்தில் கவனிக்கப்பட்டார். அதன் பிறகு இவர் அடைந்த வளர்ச்சி அபரிமிதமானது, பல அவமானங்களை தாண்டி வந்தது. முதலில் கிண்டல் செய்யப்பட்ட இவரது தோற்றமே இன்று இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

காமெடி நடிகராக மட்டுமல்லாமல் அவர் நாயகனாக நடித்து கூர்கா, தர்மபிரபு, ஜோம்பி உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன, இன்னும் லிஸ்ட்டில் பல படங்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றன. இப்படி பிஸியானவராக இருந்த யோகிபாபு தமிழ் சினிமாவின் மோஸ்ட் எலிஜிபல் சிங்கிளாக இருந்து வந்தார் (தற்போது இல்லை). 'பிகில்' பட ஆடியோ லான்ச்சில் விஜய் யோகி பாபுவின் திருமணம் குறித்து பேசினார். அப்போது யோகி பாபு வெட்கப்பட்டதை தமிழகமே ரசித்தது. 'தர்பார்' ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் வர்ற ‘தை’ மாதத்திற்குள் அவருக்கு திருமணம் நடைபெற்றுவிடும் என்று கூறினார். இப்படி பிரபலங்கள் மத்தியிலும் அவருடைய திருமண பேச்சு அதிகம் இருந்தது.
 

yogi babu

 

 

அவ்வப்போது திடீர் திடீரென சமூக வலைதளங்களில் 'யோகிபாபுவுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற போகிறது' என்று வதந்திகள் பரவின. ஒரு முறை அதற்கு யோகி பாபு வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்து வந்தார். இவ்வளவு ஏன், யோகி பாபுவுக்கும் நடிகை ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற போவதாக சமூக வலைதளத்தில் பரவ, அதற்கும் யோகிபாபு மறுப்பு தெரிவித்தார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் யோகி பாபு அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் விதமாக தனக்கும் மஞ்சுபார்கவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாக ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். குல தெய்வம் கோவிலில் நடத்த திட்டமிட்டிருந்ததால், விசயம் வெளியில் தெரிந்தால் ரசிகர்கள், ஊடகங்கள் கூடி விடுவார்கள் என்று அறிவிக்காமல் அமைதியாக நடத்தியிருக்கிறார்கள். இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் விரைவில் மிக பிரம்மாண்டமான ஒரு வரவேற்பை நடத்த யோகிபாபு திட்டமிட்டுள்ளார் எனவும் அதில் பிரபலங்கள், ஊடகங்களுக்கு அழைப்பு இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. எப்படியோ கல்யாண வயசு வந்த யோகிபாபுவுக்கு கல்யாணம் நடந்துவிட்டது. சாதாரண பின்னணியில் இருந்து வந்து, இன்று தன் திருமணத்தை தமிழகத்தில் செய்தியாகப் பேச வைத்திருக்கும் யோகி பாபு உண்மையில் இளைஞர்களுக்கு ஒரு மோட்டிவேஷன்தான்.   

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்