
சமீபத்தில் வேதிகா நடித்த கஜானா படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் யோகி பாபுவும் நடித்திருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதனை குறிப்பிட்டு பேசிய படத்தின் தயாரிப்பாளர், “யோகி பாபு ரூ.7 லட்சம் கொடுத்தால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பார். ஒவ்வொரு படமும் ஒரு நடிகனுக்கு குழந்தை மாதிரி. அந்த குழந்தையை வளர்த்தெடுக்க பொறுப்பு வேண்டும். அது இல்லையென்றால் நடிகனாக இருக்கவே லாயக்கில்லை” என சாடியிருந்தார். இது தமிழ் சினிமாவில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் யோகி பாபு லீட் ரோலில் நடித்த ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அந்த தயாரிப்பாளர் கூறிய கருத்துக்கு பதிலளித்தார் யோகி பாபு. அவர் பேசியதாவது, “என்னுடைய சம்பளத்தை நான் ஃபிக்ஸ் பண்ணுவதில்லை. வெளியில் இருப்பவர்கள் தான் பண்ணுகிறார்கள். என் சம்பளம் என்ன என்று எனக்கே தெரியவில்லை. அந்த நிலைமையில் தான் போய்கிட்டு இருக்கு. சம்பளத்தை கேட்டால் தான் நாம் எதிரி ஆகிவிடுகிறோம். அதுதான் உண்மை. நான் நேற்றோ அதற்கு முன் தினமோ சினிமாவுக்கு வரவில்லை. ஆனால் யார் யாரோ என்னென்னமோ பேசுகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னுடன் 4 வருஷம் வேலை பார்த்த ஒரு தம்பி, ஹீரோவாக நடிக்கப்போவதாக சொன்னான். நானும் வாழ்த்தி வழியனுப்பினேன். அப்புறம் அதில் இரண்டு நால் நடிக்கிறீங்களான்னு கேட்டான். நானும் நடித்து கொடுத்தேன். அந்த படத்துக்கு தான் ரூ.7 லட்சம் கேட்டேன் என சொல்கிறார்கள். இந்த படம்(ஜோரா கைய தட்டுங்க) என் படம். நான் தான் புரொமோஷனுக்கு வர வேண்டும். வரவில்லை என்றால் தப்பு. எனக்கு சொன்னார்கள் வந்துவிட்டேன். இன்றைக்கு பெரியவர்கள் முன்னாடி சொல்கிறேன் எனக்கு எவ்ளோ பேர் பணம் தர வேண்டும் என தெரியுமா. லிஸ்ட் எடுத்து தரவா. உங்களால் வாங்கிக் கொடுக்க முடியுமென்றால் சொல்லுங்கள் எடுத்து தருகிறேன். பேசுபவர்கள் பேசட்டும் அவர்களை அந்த ஆண்டவன் பார்த்துக் கொள்வான்” என்றார்.