yogi adityanath about the vaccine war movie

இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் வந்த நிலையில், பெரும் சர்ச்சை உண்டானது. தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரிவில் மற்றும் சிறந்த துணை நடிகை என்ற பிரிவிலும் 69வது தேசிய விருதுகளில் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான படம் 'தி வேக்ஸின் வார்'. இப்படம் கோரோனோவிற்கு எதிரான இந்தியாவின் போரின் அடிப்படையிலும், உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க மருத்துவத் துறை எடுத்த முயற்சிகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதில் நானா படேகர், பல்லவி ஜோஷி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து பேசிய பிரதமர் மோடி "ஒவ்வொரு இந்தியனையும் இப்படம் பெருமைப்பட வைத்துள்ளது" என படக்குழுவை பாராட்டியிருந்தார். மேலும் மாதவனும் படத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'தி வேக்ஸின் வார்' படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தி வேக்ஸின் வார் என்று ஒரு புது படம் வந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் சிறந்த அறிவியல் சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் படம் இந்தியாவுக்கு எதிரான சதிகளை அம்பலப்படுத்தவும், இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட அற்புதமான ஆராய்ச்சியை முன்னிலைப்படுத்தவும், உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு அதிக அங்கீகாரத்தை வளர்க்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கோரோனோ காலகட்டத்தின் போது, ​அதை எதிர்த்து போராடுவது ஒரு தனிநபரின் போர் அல்ல. பிரதமர் ஒரு கேப்டனைப் போல வழிநடத்திய நிலையில், சில நபர்கள் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் இந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்த முயன்றனர். நாட்டிற்கு எதிரான இந்த சதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது மற்றும் தேசத்தை குறைத்து மதிப்பிடும் முகங்களையும் வெளிப்படுத்துகிறது" எனறுள்ளார்.