Skip to main content

“இந்த கரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” - பாடகர் யேசுதாஸ் வருத்தம்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

spb and yesudass

 

'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று (26.09.2020)உடல் நலக் குறைவால் (74 வயது) மறைந்தார்.

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி.யின் உயிர்பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்ததாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில், இன்று காலை எஸ்.பி.பி.யின் உடல், தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரோனா காலகட்டம் என்பதால் பலரும் நேரில் கலந்து அஞ்சலி செலுத்த முடியாமல் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பாடகர் கே ஜே யேசுதாஸ் எஸ்.பி.பி மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை எவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அண்ணா என்று கூப்பிடும்பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்கவில்லை ஆனால் உடன்பிறந்தவர் போலப் பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.யும் சகோதர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டுப் பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார்.

 

'சங்கராபரணம்' என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார் அதைக் கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை எனக் கூறமாட்டர்கள். இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். 'சிகரம்' படத்தில் பாடிய 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு...' என்ற பாடல் பாலு எனக்குப் பரிசாகப் பாடியதாகக் கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். உடன் இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.

 

Ad

 

நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த கரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன்னிப்பு கேட்க வேண்டும்” - இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பி. மகன் நோட்டீஸ்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
SPB al issue sp charan send legal notice to music diector

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அரங்கேறி வருகிறது. ராஷ்மிகா, கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதே சமயம் மறைந்த பாடகரின் குரல்களை ஏஐ மூலம் மீண்டும் கொண்டு வந்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான், லால் சலாம் படத்தில் மறைந்த பின்னணி பாடகர்களான ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்கியா ஆகியோரின் குரல்களை, 'திமிறி எழுடா' பாடலில் பயன்படுத்தியிருந்தார். 

அவர்களின் குரலை ஏ.ஐ. மூலம் பயன்படுத்தியதற்காக, அவர்களின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். மேலும் அதற்குத் தகுந்த சன்மானமும் கொடுத்துள்ளோம் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலை ஏ.ஐ. மூலம் ‘கீடா கோலா’ என்ற தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியுள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக ஒரு பேட்டியிலும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எஸ்.பி.பி குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் அனுப்பியுள்ளார். 

அவர் நோட்டீசில் குறிப்பிட்டிருப்பதாவது, “எந்தவொரு தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பயனளிக்க வேண்டுமே தவிர வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. அவரது குரல் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இது எங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயம். முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“எஸ்.பி.பி என்பது பொதுச் சொத்து” - எஸ்.பி.பி. சரண்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

sp charan about spb

 

இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இன்றுடன் அவர் மறைந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மகன் எஸ்.பி.பி. சரண், திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இத்தனை வருஷங்கள் அப்பாவை வாழ வைத்த, அவரது பாடல்கள் மூலம் வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. அப்பாவுக்காக நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு அரசிடம் போகவுள்ளேன். ரசிகர்களின் ஆசைப்படி அரசாங்கம் மணிமண்டபம் கட்டினால் நல்லது தான். நேரடியாக அரசிடம் போய், மணிமண்டபத்துக்கு தொகை கொடுங்க என்று நான் கேட்பது சரியாக இருக்காது" என்றார். 

 

அப்போது எஸ்.பி.பியின் பாடல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "எங்கிட்டே அப்படி யாரும் சொன்னதில்லை. அதெல்லாம் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் பாடலாம். எஸ்.பி.பி என்பது பொதுச் சொத்து. எல்லாரும் கேட்டு மகிழுங்கள்" என்றார்.