gdfssbdf

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். யாஷிகா ஆனந்த் சென்ற கார், நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், நடிகை யாஷிகாவின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது தாயார் கூறியுள்ளார். அதில்...

"யாஷிகா தற்போது நலமுடன் இருக்கிறார். கால், இடுப்புமற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் அவரது தோழி இறந்த செய்தி அவருக்கு இன்னும் தெரியாது. யாஷிகா கண் விழித்தவுடன் அவரது தோழி பவானி குறித்து கேட்டபோது, அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளோம். மேலும், மருத்துவர்கள் இதுகுறித்து யாஷிகாவிடம் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டார்கள். சிகிச்சைக்குப் பின் யாஷிகா மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும், இரண்டு மாதங்கள் கழித்துதான் யாஷிகாவால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

நடிகை யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது ஓட்டுநர் உரிமமும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.