
கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
காரை ஓட்டிய யாஷிகாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார். பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலை சரியாகி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ஆஜராகாவிட்டால் அவரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் யாஷிகா நேரில் ஆஜராகியுள்ளார். பின்பு தனது பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி ஆஜராகியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. மேலும் முன்பு கூறியது போல் அடுத்த மாதம் 25ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.