
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் 'யாத்திசை'.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் வருகிற (21.04.2023) அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 'யாத்திசை' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசியதாவது, "தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப்படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். ஒரு ஷெட்யூல் முடித்துக் காட்டச் சொன்னார்கள். அதன் பிறகே இந்தப் படம் உருவாவது உறுதியானது. 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம், அந்த மொழி வழக்கு; அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியில் எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும், இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை. மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார். இந்தப் படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல. ஆனால், யாத்திசை மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது" என்றார்.
விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது, "யாத்திசை சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் இந்தப் படம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள். எல்லோரையும் இந்தப் படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. டிரெய்லரை விட இந்தப் படத்தில் இன்னும் பிரம்மாண்டம் இருக்கும். ஹாலிவுட் போர் படங்களில் கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்" என்றார்.