
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர், பல திரைப்படங்கள், இணை தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தயாரித்து உள்ளார். இவர் தயாரிப்பில் வெளியான இணை தொடர் 'எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2' (xxx season 2). இதில் ராணுவ வீரர் மனைவியை ஆபாசமாக சித்தரித்துள்ளதாக கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ வீரர் ஷாம்பு குமார் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த மனுவில் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.
இந்த மனு பீகார் மாநிலம் பெகுசராய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பியது. ஆனால் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகவில்லை. இருப்பினும் இவர்களது சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தொடரில் சில காட்சிகளை நீக்கியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் பீகாரின் பெகுசராய் நீதிமன்றம் 'எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2' (xxx season 2) தொடரில் ராணுவ வீரர்களை அவமதித்ததாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனிடையே தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சொந்தமாக பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஏக்தா கபூரின் தாயார் ஷோபா கபூரும் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 'எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2' (xxx season 2) தொடர் இவர்களின் நிறுவனம் சார்பாக நடத்தி வரும் ஏ.எல்.டி.பாலாஜி என்ற ஓடிடி தளத்தில் வெளியானது நினைவு கூறத்தக்கது.