Advertisment

இரவு எட்டு மணிக்கு நான் கேட்ட பாடல் எஸ்.ஏ. ராஜ்குமார் வாழ்க்கையில் ஏற்படுத்திய திருப்புமுனை!

writer sura

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

ஒரு மனிதரிடம் உள்ள திறமையைக் கண்டறிவது என்பது எளிதான விஷயமல்ல. அதுவும் ஒருவகையான அரிய குணம்தான். திரைப்படங்களில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நான் பணியாற்றிக்கொண்டிருந்த காலங்களில் சிலரது திறமையை ஆரம்ப காலத்திலேயே நான் கணித்திருக்கிறேன். அதுபற்றி முன்னரே சில விஷயங்களை நக்கீரன் வாசகர்களோடு பகிர்ந்தும் இருக்கிறேன். அந்தவகையில், இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமாரின் திறமையை நான் கணித்தது எப்படி என்பது பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Advertisment

‘சின்ன பூவே மெல்ல பேசு’ என்ற திரைப்படத்தின் மூலமாக எஸ்.ஏ. ராஜ்குமார் சினிமாவில் அறிமுகமானார். ராபர்ட் - ராஜசேகர் இயக்கிய அப்படத்தில் ராம்கி கதாநாயகனாக அறிமுகமானார். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். படம் வெளியானபோது 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அது டிவி, சேட்டிலைட் சேனல்கள் இல்லாத காலக்கட்டம். அந்த சமயத்தில் அகில இந்திய வானொலி (ஆல் இந்திய ரேடியோ) விவித் பாரதியில் நிகழ்ச்சி முடிந்த பிறகு, விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். பட ரிலீஸ் நெருங்கும் சமயத்தில் அதில் பாடல்களை ஒலிபரப்பச் செய்து படத்தை விளம்பரப்படுத்துவார்கள். இன்றைக்கு ஸ்லாட், ஸ்பான்சர் ப்ரோகிராம் மூலம் விளம்பரப்படுத்தும் அதேமுறைதான். இரவு 7 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குப் பிறகும் சில நாட்களில் விளம்பரதாரர் நிகழ்ச்சி தொடரும்.

ஒருநாள், விளம்பரதாரர் நிகழ்ச்சியில் ‘சின்ன பூவே மெல்ல பேசு’ படத்தின் பாடல்களை நான் கேட்க நேர்ந்தது. பாடல்கள் மிக அருமையாக இருந்தது. யார் இசையமைப்பாளர் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், அறிமுக இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் என தெரியவந்தது. ஆனால், அந்தப் பாடல்கள் கேட்பதற்கு அனுபவமிக்க இசையமைப்பாளர் இசையமைத்ததுபோல இருந்தது. அந்தச் சமயத்தில், மோகன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருந்த ‘குங்குமக்கோடு’ என்ற படத்திற்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தை ‘ஆகாயத்தாமரை’, ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய வி. அழகப்பன் இயக்கினார். மோகனுக்கு ஜோடியாக நளினி, ரம்யா கிருஷ்ணன் என இருவர் நடித்தனர்.

இயக்குநர் வி. அழகப்பன் என்னுடைய நெருங்கிய நண்பரும்கூட. அவரிடம் “இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக யாரை ஒப்பந்தம் செய்துள்ளீர்கள்” என்றேன். “இன்னும் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறேன்” என்றார். நான் அவரிடம், விவித் பாரதியில் ‘சின்ன பூவே மெல்ல பேசு’ படப் பாடல்கள் கேட்டது பற்றியும் அதற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்திருப்பது குறித்தும் கூறினேன். நேரம் கிடைத்தால் அந்தப் பாடல்களை இன்று இரவு விவித் பாரதியில் கேளுங்கள் என அவரிடம் கூறினேன். அவரும் அன்று இரவு அந்தப் பாடல்களைக் கேட்டுள்ளார்.

அவருக்குப் பாடல்கள் மிகவும் பிடித்துவிட்டதால், யார் அந்த எஸ்.ஏ. ராஜ்குமார் என்ற விசாரியுங்கள் என்று என்னிடம் கூறினார். அந்த சமயத்தில் செல்ஃபோன் எதுவும் கிடையாது. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களிடம் கேட்டு எஸ்.ஏ. ராஜ்குமாரின் முகவரியை வாங்கினேன். திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய சந்திற்குள் அவர் வீடு இருந்தது. நான் அவரை நேரில் சந்தித்து அவரது பாடல்கள் சிறப்பாக இருப்பதாகவும், மோகன் நடிக்கும் புதிய படத்திற்கு அவரை கமிட் செய்ய இயக்குநர் வி. அழகப்பன் விரும்புவதாகவும் கூறினேன். பின், இருவரும் தி.நகரில் இருந்த ‘குங்குமக்கோடு’ பட அலுவலகத்திற்குச் சென்று வி.அழகப்பனை சந்தித்தோம். ‘குங்குமக்கோடு’ படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமாரையே கமிட் செய்துவிட்டனர்.

‘சின்ன பூவே மெல்ல பேசு’ படம் வெளியாவதற்கு முன்பே எஸ்.ஏ. ராஜ்குமாருக்கு இரண்டாவது பட வாய்ப்பு கிடைத்துவிட்டது. 'தாலாட்டு நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது...' என ஒருபாடல் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடலை அவரே எழுதி இசையமைத்தார். ‘குங்குமக்கோடு’ பாடல்கள் வெளியானபோது மிகப்பெரிய ஹிட் அடித்தது. ‘சின்ன பூவே மெல்ல பேசு’ மற்றும் ‘குங்குமக்கோடு’ பட பாடல்களுக்குக் கிடைத்த வெற்றி எஸ்.ஏ. ராஜ்குமாரை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டுசென்றது. 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னனி இசையமைப்பாளராக வலம்வந்த எஸ்.ஏ. ராஜ்குமாரின் திறமையை ஆரம்பக் காலத்திலேயே நான் கணித்தேன் என்பது எனக்கே பெருமையாக உள்ளது. திறமை என்ற ஒன்றிருந்தால் வாய்ப்பு கதவுகள்நிச்சயம் நமக்குத் திறக்கும் என்பதற்கு எஸ்.ஏ. ராஜ்குமாரின் திரைவாழ்க்கை உதாரணம்.

writer sura
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe