/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/67_21.jpg)
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்துவருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"வாழ்க்கையில் திட்டமிடல் என்பது மிக முக்கியம். ஒரு காரியத்தைச் செய்யும்முன் ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசித்து செய்ய வேண்டும். அப்படிச்செய்தால் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றிபெறுவோம் என்பது உண்மை. ‘தேவர் மகன்’ திரைப்படத்தின்போது கமல்ஹாசன் எவ்வாறு திட்டமிட்டுச் செயல்பட்டார் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்.
‘தேவர் மகன்’ திரைப்படம் கமல்ஹாசன் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். பரதன் அந்த திரைப்படத்தை எவ்வளவு அருமையாக இயக்கியிருந்தார் என்பது நமக்குத் தெரியும். ‘தேவர் மகன்’ எனப் பெயரில் உள்ளது போலவே தேவர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கிராமத்துக் கதையைக் கமல் உருவாக்கினார். மண் சார்ந்த கதையாக இருப்பதால் உதவிக்காக சங்கிலி முருகனை கமல் உடன்வைத்துக்கொண்டார். மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாக இது மாதிரியான மண் சார்ந்த கதைகளை எடுத்த அனுபவம் சங்கிலி முருகனுக்கு அதிகம். ‘தேவர் மகன்’ திரைப்படம் மண் வாசனை மாறாமல் இருந்ததற்கு சங்கிலி முருகனும் ஒரு காரணம்.
நடிகர் கமல், இந்தத் திரைப்படத்தில் செய்த மிக புத்திசாலித்தனமான செயல் என்றால், அது சிவாஜி கணேசனைதந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததுதான். இதற்காக கமல், சிவாஜி கணேசனை அணுகியபோது சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, உடலில் ஃபேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தியிருந்தார். ‘தேவர் மகன்’ படத்தில் நடிக்க கமல் அணுகியதும்தன்னுடைய உடல்நிலையைக் காரணங்காட்டி சிவாஜி மறுத்துவிடுகிறார். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருந்தார். நீங்கள்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பீர்கள் என சிவாஜியிடம் எடுத்துக்கூறிய கமல், அமெரிக்காவில் எடுத்துவரும் சிகிச்சை முடியும்வரை தான் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதே போல, சிவாஜி கணேசன் சிகிச்சையை முடித்து திரும்பிய பிறகே ‘தேவர் மகன்’ திரைப்படம் தொடங்கப்பட்டது. கமல் ஏன் அவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதற்கு ‘தேவர் மகன்’ படத்தைப் பார்க்கும்போது நமக்கும் தெரியும்.
வெளிநாட்டில் படித்துவிட்டு கமல் சொந்த கிராமத்திற்கு வருவார். சிவாஜி சார் கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருப்பார். கமலை சிவாஜி உட்காரச் சொல்லுவார். கமல் உட்கார மறுத்துவிடுவார். பொதுவாக கிராமப்புறங்களில் மதிப்பு, மரியாதை காரணமாக பெரியவர்கள் முன் சிறியவர்கள் உட்காரமாட்டார்கள். நீங்கள் யோசித்துப்பாருங்கள்... அந்த இடத்தில் சிவாஜி கணேசனுக்கு பதிலாக வேறொரு நடிகர் இருந்து கமல் இவ்வாறு உட்கார மறுத்திருந்தால் ரசிகர்களே அதை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். அந்த இடத்தில் சிவாஜி கணேசன் இருந்ததால்தான் அந்தக் காட்சி பொருத்தமாகவும் மண் வாசனையுடனும் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைத்தது. ‘தேவர் மகன்’ திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதற்கு காரணம் சிவாஜி கணேசனின் நடிப்பும், அந்தக் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன்தான் நடிக்க வேண்டுமென கமல் தீர்மானமாக எடுத்த முடிவும்தான்".
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)