ADVERTISEMENT

"அந்த ஒரு படம் பார்த்தாலே சத்யஜித் ரேவை கையெடுத்து கும்பிட வேண்டும் என்று தோன்றும்" - எழுத்தாளர் சுரா புகழாரம்

05:19 PM Dec 30, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் சத்யஜித் ரே குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

சத்யஜித் ரே இந்திய திரையுலகின் தந்தை. அவர், இந்திய திரையுலகம் உலகத் திரைப்பட உலகத்திற்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை. இன்றைய தலைமுறையினர் எத்தனை பேர் அவர் படத்தை பார்த்துள்ளார்கள் என்று தெரியவில்லை. சிலர் அவர் இயக்கிய அனைத்து படங்களையும் பார்த்திருக்கலாம். சிலர் ஒரு படம்கூட பார்க்காமல் இருக்கலாம். ஆனால், அவர் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர் இயக்கிய நாயக் திரைப்படம் பற்றி சுருக்கமாக உங்களுக்குக் கூறுகிறேன். பெங்காலி மொழியில் நாயக் என்றால் தமிழில் நாயகன் என்று பொருள். சத்யஜித் ரே இயக்கிய அற்புதமான திரைப்படங்களுள் ஒன்று இந்தப்படம். 1966இல் வெளியான இப்படம், 1967ஆம் ஆண்டு சிறந்த வங்கமொழி திரைப்படத்திற்கான விருதை வென்றது. மேலும், பெர்லின் திரைப்பட விழாவில் ஜுரி விருதும் வென்றது.

பெங்காலி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உத்தம் குமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். நாயகி ஷர்மிளா தாகூர் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மொத்த படமும் ரயிலிலேயே எடுக்கப்பட்டிருக்கும். கதாநாயகன் அரிந்தமிற்கு டெல்லியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கும். அந்த விருதைப் பெறுவதற்காக நாயகன் கல்கத்தாவில் இருந்து டெல்லி நோக்கி ரயிலில் செல்வான். அவன் பயணிக்கும் அதே பெட்டியில்தான் நாயகி ஷர்மிளா தாகூரும் பயணிப்பார். நாயகன் அரிந்தமிற்கு நெகட்டிவ் இமேஜ் வெளியே இருக்கும். நாயகி பத்திரிகையாளர் என்பதால் அவளுக்கும் அது பற்றி முன்னரே தெரியும். பயணம் தொடங்கியதும் அது பற்றி அவனிடம் கேட்டு அதை நீண்ட நேர்காணலாகப் பதிவு செய்துகொள்வாள்.

அந்த பேட்டியைத் தொடங்குவதற்கு முன்பாக அரிந்தமின் ரகசியப் பக்கங்களை அம்பலப்படுத்திவிட வேண்டும் என்று அவள் நினைப்பாள். ஆனால், அவனுடன் பேசபேச அவனுக்கும் வாழ்க்கையில் சோகங்கள் இருக்கின்றன, அவனுக்குள்ளும் கசப்பான அனுபவங்கள் உள்ளன. அவனுக்கும் கண்ணீர் கதைகள் இருக்கின்றன என்பதை அவள் உணர ஆரம்பிப்பாள். அவன் தன்னுடைய கதையைச் சொல்லும்போது இடையிடையே இவள் ஆறுதலும் கூறுவாள். அந்தப் பேட்டி முடியும்போது அவன் மீது மனப்பூர்வமான மரியாதை இவளுக்கு வந்துவிடும். பயண இறுதியில் ரயில், ரயில் நிலையத்தை வந்தடையும். ரயிலில் இருந்து அவன் இறங்கியதும் ரசிகர்கள் கூட்டம் அவனை சூழ்ந்துவிடும். நாயகி அவனிடம் இருந்து பிரியாவிடைபெற்று அங்கிருந்து கிளம்பிச் செல்வாள். இவன் அங்கிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்துக்கொண்டு இருப்பான். அவள் இவனைத் திரும்பி பார்த்துக்கொண்டே நடந்து செல்வாள்.

படத்தில் உத்தம் குமாரும் ஷர்மிளா தாகூரும் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். சிற்பி சிலையைச் செதுக்குவதுபோல ஒவ்வொரு காட்சியையும் சத்யஜித் ரே செதுக்கியிருப்பார். சுப்ரத மித்ராவின் ஒளிப்பதிவு ஓவியம்போல இருக்கும். நாயக் படத்தைப் பார்த்தால் இயக்குநர் சத்யஜித் ரே மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டு அவரைக் கையெடுத்து கும்பிடவேண்டும் என்று தோன்றும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT