Advertisment

கூர்ந்து கவனித்த மோகன்லால்; கழட்டி கையில் கொடுத்த சிவாஜி - ஆச்சர்யப்பட்ட பிரபு

writer sura

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சிவாஜி கணேசன் மற்றும் மோகன்லாலுக்கு இடையேயான நெருக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

மோகன்லால் பெருமைப்படும் அளவிற்கு ஒரு விஷயத்தை சிவாஜி கணேசன் செய்திருக்கிறார். ’ஒரு யாத்ராமொழி’ என்று மலையாளத்தில் 1997ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருப்பார். அவருக்கு தந்தையாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். கதைப்படி, மோகன்லால் மலையாளம் பேசக்கூடியவர்; சிவாஜி தமிழ் பேசக்கூடியவர். படத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்; இளையராஜா இசையமைத்திருந்தார். கேரளாவில் இந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. சிவாஜி கணேசனுக்கு மகனாக நடித்ததை ரொம்பவும் பெருமையாக மோகன்லால் நினைத்தார்.

Advertisment

தன்னுடைய ஆரம்பக்காலங்களில் கேரளாவிற்கு நாடகம் நடிக்க வந்தது பற்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களிடம் சிவாஜி நெகிழ்ச்சியாகப் பேசுவாராம். சிவாஜி கதகளி பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டதும் மோகன்லால் அதற்காக ஏற்பாடெல்லாம் செய்து கொடுத்திருக்கிறார். அந்தப் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டுவிடுகிறது. அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய சிவாஜி, சென்னை வந்தால் என்னுடைய வீட்டிற்கு கட்டாயம் வரவேண்டும் எனக் கூறுகிறார். கொஞ்ச நாட்கள் கழித்து, மோகன்லால் தன்னுடைய மனைவியுடன் சென்னை வருகிறார்.

வீட்டிற்கு வரவேண்டும் என்று சிவாஜி அழைத்திருந்ததால் தன்னுடைய மனைவியுடன் அங்கு செல்கிறார். மோகன்லால் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று சிவாஜி காட்டியுள்ளார். அந்த நேரத்தில், ஒரு தகப்பன் தன்னுடைய மகனின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் உணர்வு தனக்கு ஏற்பட்டதாக அவர் எழுதிய புத்தகத்தில் மோகன்லால் குறிப்பிட்டிருக்கிறார். அங்கிருந்த சிவாஜியின் புகைப்படங்கள், அவர் வாங்கிய விருதுகள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நடந்தபோது ஒரு அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்ப்பது போல மோகன்லாலுக்கு இருந்ததாம்.

அப்போது சிவாஜி கையில் ஒரு வாட்ச் இருந்துள்ளது. அதை நீண்ட நேரம் மோகன்லால் பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். அதைக் கவனித்த சிவாஜி, அந்த வாட்ச்சை கழட்டி மோகன்லாலின் கையில் கட்டியுள்ளார். அந்த வாட்ச்சை மோகன்லால் இன்றும் வைத்துள்ளாராம். இந்தச் சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து, எதேச்சையாக பிரபுவை மோகன்லால் சந்தித்திருக்கிறார். அப்போது சிவாஜி வாட்ச் பரிசளித்தது குறித்து அவரிடம் கூறியிருக்கிறார். அதற்கு பிரபு, அந்த வாட்ச் அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்தமான வாட்ச். பொதுவாக அவருக்குப் பிடித்ததை யாருக்கும் கொடுக்கமாட்டார். உங்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்றால் உங்களையும் அவருக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது என்று அர்த்தம் எனக் கூறியிருக்கிறார். அதைக் கேட்கும்போதே மோகன்லாலுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்ததாம். இது அனைத்தையும் தான் எழுதிய புத்தகத்தில் மோகன்லால் நினைவுகூர்ந்துள்ளார்.

writer sura
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe