ADVERTISEMENT

'பாகுபலி' கலை இயக்குநரின் பிரம்மாண்டத்தை 40 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தது எப்படி? விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் சுரா!

02:22 PM Jul 02, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கலை இயக்குநர் சாபு சிரில் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

சில மனிதர்களின் திறமைகள் குறித்து எளிதில் நாம் யூகித்துவிடலாம். அவர்களையோ அவர்களின் செயல்களையோ பார்த்தவுடன் இந்த அளவிற்கு இவர்கள் திறமைசாலியாக இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் பெரிய உயரத்தைத் தொடுவார்கள் எனக் கணிக்க முடியும். பின்னாட்களில் நாம் கணித்ததுபோலவே அந்த மனிதர் பெரிய இடங்களைத் தொட்டு புகழ் உச்சிக்குச் சென்றால் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமல்லவா. அந்த வகையில், கலை இயக்குநர் சாபு சிரில் எதிர்காலம் குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே நான் கணித்தது குறித்து உங்களிடம் கூறுகிறேன்.

நடிகை ரேவதியும் அவர் கணவர் சுரேஷ் மேனனும் இணைந்து 'புதிய முகம்' என்ற படத்தைத் தயாரித்தனர். அப்படத்தை சுரேஷ் மேனன் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். கலை இயக்குநராக சாபு சிரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். நான்தான் அந்தப் படத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி. கொடைக்கானல் அருகே படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற நாளில், டைனிங் டேபிள் செட்டப்பில் ஒரு காட்சி படமாக்கிக்கொண்டிருந்தனர். அந்த டைனிங் டேபிளில் இருந்த பொருட்களைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. உடனே சுரேஷ் மேனனிடம், படத்தின் கலை இயக்குநர் யார் என்றேன். அவர் என்ன விஷயம் என்று கேட்க, டேபிளில் உள்ள பொருட்களும் அவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதமும் வழக்கமான ரசனை கொண்ட ஒருவர் செய்ததுபோல இல்லை. இந்தக் கலை இயக்குநருக்கு நிச்சயம் மாறுபட்ட ரசனை இருக்கிறது என்றேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் சாபு எதிரே வந்துகொண்டிருந்தார். அவர், பிரியதர்ஷன் இயக்கிய சில மலையாளப் படங்களில் பணியாற்றிவிட்டு அப்போதுதான் தமிழ் சினிமாவில் பணியாற்றத் தொடங்கியிருந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்த சுரேஷ் மேனன், நான் அவரைப் பாராட்டிய விஷயத்தை அவரிடம் கூறினார். உடனே சாபு, எதற்காக என்னைப் பாராட்டுனீங்க என்றார். நான் அவரது ரசனை வழக்கத்திற்கு மாறான ரசனையாக இருப்பதாகக் கூறி அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தேன். மேலும், எதிர்காலத்தில் கலை இயக்குநராக மிக உயர்ந்த இடத்தை நீங்கள் தொடுவீர்கள் என்றும் வாழ்த்தினேன். என்னுடைய வாழ்த்தை அவர் சிரித்தவாறே ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு சுரேஷ் மேனன் இயக்கிய 'பாசமலர்கள்' படத்திலும் நான் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் அவர் கலை இயக்குநராகவும் பணியாற்றினோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெமினி வாசன் ஹவுஸில் நடைபெற்றபோது நாங்கள் இருவரும் தினமும் சந்தித்துக்கொள்வோம். அதன்மூலம் எனக்கும் அவருக்கும் இடையே நல்ல நெருக்கம் உருவாகியது.

நான் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஒரு படத்தில் யாரை கலை இயக்குநராக ஒப்பந்தம் செய்யலாம் எனப் படக்குழு யோசித்தபோது சாபு சிரிலின் பெயரை நான் பரிந்துரைத்தேன். அந்தப் படத்தின் இயக்குநரை கோடம்பாக்கத்தில் உள்ள சாபு சிரிலின் வீட்டிற்கே நான் அழைத்துச் சென்றேன். அவர் வீடு முழுக்க கலைப்பொருட்கள் இருந்தன. ஏதாவது வித்தியாசமான பொருட்களை எங்காவது பார்த்தால் உடனே வாங்கிவிடுவாராம். அதேபோல கலை தொடர்பான உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகங்கள் வெளியாகும்போது அதை வாங்கிப் படிப்பாராம். கலை இயக்கம் என்ற அவர் தொழிலை எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் அவர் செய்கிறார் என்பதற்கு இதுவே சான்று. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எப்படிக் கலைத் தாகம் இருந்ததோ அது மாதிரியான கலைத் தாகம் கொண்டவர் சாபு சிரில். அதனால்தான் அவருக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மலையாள படமான 'தேன்மாவின் கொம்பத்து', 'காலாபாணி', இந்திப்படமான 'ஓம் சாந்தி ஓம்', தமிழில் 'எந்திரன்' ஆகிய நான்கு படங்களுக்கு சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளார். மேலும், 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திற்காக தமிழ்நாடு அரசின் மாநில விருது, 'பாகுபலி' படத்திற்காக ஆந்திர அரசின் நந்தி விருது எனப் பல விருதுகளையும் வென்றுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட் படமென்றால் அதற்கு சாபு சிரில்தான் கலை இயக்குநர் என்று நாம் சொல்லக்கூடிய அளவிற்கு புகழ்பெற்ற ஒருவராக இன்று மாறியுள்ளார். அவருடைய இந்த வளர்ச்சியை 40 ஆண்டுகளுக்கு முன்பே நான் கணித்தது எனக்கே பெருமை தரக்கூடிய விஷயமாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT