Advertisment

"ரஜினியைவிட அதிக சம்பளம் வேண்டும்..."  'பொன்னு வெளையிற பூமி' படத்தின்போது கறாராக இருந்த ராஜ்கிரண்!

writer sura

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ராஜ்கிரண் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

திரை நடிகர்களின் வாழ்க்கையில் சில நேரங்களில் மிகப்பெரிய சம்பவங்கள் நடைபெறும். வருடங்கள் கடந்த பிறகு அந்தச் சம்பவங்கள் குறித்து யோசித்துப் பார்த்தால் அந்த நடிகர்களுக்கே அது வியப்பாக இருக்கும். நடிகர் ராஜ்கிரண் வாழ்க்கையில் நடந்த அப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து உங்களுக்கு கூறுகிறேன்.

Advertisment

பி. வாசுவின் உதவி இயக்குநர் கிருஷ்ணன் நடிகர் ராஜ்கிரணை வைத்து 'பொன்னு வெளையிற பூமி' என்ற படத்தை இயக்கத் திட்டமிட்டார். அப்படத்தில் குஷ்புவும் வினிதாவும் கதாநாயகிகளாக நடித்தனர். அந்தச் சமயத்தில் நடிகை குஷ்பு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்துடன் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தைக் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஏ.ஜி. சுப்ரமணியம் தயாரித்தார். நான் அந்தப் படத்தில் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினேன்.

'என் ராசாவின் மனசிலே', 'எல்லாமே என் ராசாதான்', 'அரண்மனைக்கிளி' ஆகிய படங்களுக்குக் கிடைத்த வெற்றி மூலம் நடிகர் ராஜ்கிரணும் உச்ச நட்சத்திரமாக இருந்தார். அவருக்கென தனி மதிப்பும் மரியாதையும் திரையுலகிற்குள் இருந்தது. 'பொன்னு விளையுற பூமி' படத்தில் ராஜ்கிரணின் சம்பளம் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய். அதில், 50 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையாகக் கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஒரு கோடிதான் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.

பூஜையுடன் தொடங்கப்பட்ட 'பொன்னு வெளையிற பூமி' படத்தின் படப்பிடிப்பு, நல்ல படியாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அந்தச் சமயத்தில், அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ராஜ்கிரண் நடிப்பில் உருவான 'மாணிக்கம்' திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதேபோல 'பாசமுள்ள பாண்டியரே' திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த இரு படங்களின் தோல்வி 'பொன்னு வெளையிற பூமி' படத்தின் வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இப்படமும் வணிக ரீதியில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தொடர் தோல்விகள் மூலம் சினிமாவில் ராஜ்கிரணின் இறங்கும் காலம் தொடங்கியது.

அதன் பிறகு பல நெருக்கடிகளை எதிர்கொண்ட ராஜ்கிரண், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த 'செவ்வேல்' திரைப்படத்திற்கு நான்தான் மக்கள் தொடர்பு அதிகாரி. அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. படப்பிடிப்பு இடைவேளையின்போது ராஜ்கிரணும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, “'பொன்னு வெளையிற பூமி' படத்தில் உங்களுக்கு எவ்வளவு சம்பளம்” என்று எனக்குத் தெரியாததுபோல அவரிடம் கேட்டேன். “நான் ஒரு கோடி பத்து லட்சம் சம்பளம் வாங்கினேன்” என்று உண்மையான சம்பளத்தை வெளிப்படையாகக் கூறினார். “ரஜினிகாந்த் ஒரு கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். அவரைவிட அதிகமாக வேண்டும் என்று கூறி ஒரு கோடி பத்து லட்சம் வாங்கினேன்” என்றார். 'செவ்வேல்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு நிறைய கடன் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துகொண்டிருந்தது. அதுபற்றி அவரிடம் கேட்கையில், "நீங்க படிச்சது உண்மைதான்... மூணு கோடிவரை இருந்தது. கிட்டத்தட்ட அதை அடைச்சிட்டேன்... இன்னும் கொஞ்சம் இருக்குது" என்றார். தற்போது அந்தக் கடனை எல்லாம் அடைத்துவிட்டு நல்ல நிலைமைக்கு வந்துவிட்டார் ராஜ்கிரண். இன்று காலங்கள் கடந்துவிட்டன. நடிகர் ராஜ்கிரண் எங்காவது தனியாக அமர்ந்து, ரஜினியைவிட நாம் அதிகமாக சம்பளம் வாங்கியிருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் அவருக்கே அது ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருக்கும்.

writer sura
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe