Advertisment

ரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம்! ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்து, தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த படத்தை தொடங்கிவிட்டார் ரஜினி. இயக்குனர் லோகேஷ் கனகராஜை சமீபத்தில் சந்தித்திருப்பதாகவும் ரஜினியின் அடுத்தப்படம் அவருடன் இருக்கலாம் எனவும் தகவல்கள் வருகின்றன. சமீபமாகவே ரஜினியின் இயக்குனர் தேர்வுகள் சற்று வித்தியாசமாகவே இருக்கின்றன.

Advertisment

muthu

ரஜினியின் ஆரம்பக் காலத்தில் அவர் அதிகமாக நடித்தது பாலச்சந்தர், எஸ்.பி. முத்துராமன், ஆர். தியாகராஜன், ராஜசேகர் போன்றோரின் படங்களில்தான். வேறு இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்தாலும் ரஜினி மீண்டும் மீண்டும் விரும்பி நடித்தது இவர்களின் படங்களில்தான். ஒரு கட்டத்தில், தான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை தானே முடிவு செய்யும், தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்த பிறகு இன்னொரு செட் உருவானது. பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் அந்த செட்டில் இருந்தனர். இடையில் மணிரத்னத்துடன் ஒரே ஒரு படத்தில் இணைந்தார். அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தபோதும் அவர்கள் மீண்டும் இணையவில்லை. அதற்கு காரணம் ரஜினியின் ஸ்டைல், மாஸ், ரசிகர்கள் வேறு வகையாக உருவாகியிருந்தன. மணிரத்னமோ வேறு பாதையில் சென்றுக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் ரஜினியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் ‘அண்ணாமலை’. அந்த படத்தின் இயக்குனராக சுரேஷ் கிருஷ்ணா அமைந்தது ஒரு விபத்து. பாலச்சந்தர் தயாரித்த அந்த படத்திற்கு முதலில் இயக்குனராக நியமிக்கப்பட்டது பாலச்சந்தரின் இன்னொரு சீடரான வசந்த். கடைசி நேரத்தில் படபிடிப்பிற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் சுரேஷ் கிருஷ்ணா இயக்குனரானார். முதல் நாள் ஷூட்டிங்கில் இருவருக்கும் சரியாக செட்டாகவில்லையாம் ஆனால், இந்தக்கூட்டணிதான் அடுத்தடுத்து நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியது. அதில் ஒன்று, இன்றுவரை ரஜினியின் மிகப்பெரிய மாஸ் படமாக திகழும் ‘பாட்ஷா’. இதன்பிறகு ரஜினிக்கு பெரிய வெற்றிகளை கொடுத்த என்னொரு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். நாட்டாமை படத்தின் மிகப்பெரிய வெற்றி கே.எஸ். ரவிக்குமாரை ரஜினிக்கு பக்கத்தில் கொண்டுவந்தது. முத்து, படையப்பா படங்கள் அடைந்த வெற்றியை ஒரு இடைவெளிக்கு பிறகு இவர்கள் இணைந்து உருவாக்கிய ‘லிங்கா’ பெறவில்லை. இடையில் இவர்கள் இணைய இருப்பதாக கூறப்பட்டாலும், அது எதுவும் படமாக உருவாகவில்லை.

Advertisment

படையப்பா என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு ரஜினி நடித்த பாபா தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் ரஜினி ரசிகர்கள் மிகவும் துவண்டு விட்டனர். மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ரஜினி, அப்பேர்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த படத்தை இயக்க தேர்ந்தெடுத்தது பி.வாசுவை. இந்த செய்தி வெளியானபோது, தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். என்னதான் வாசு ரஜினிக்கு பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் அந்த சமயத்தில் இயக்குனராக தமிழில் சில தோல்விப்படங்களை கொடுத்து, லைம் லைட்டுக்கு வெளியே இருந்தார். ரஜினி ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக வந்தது அந்தப்படம் மலையாள படம் ‘மணிச்சித்திர தாழ்’ படத்தின் ரீ-மேக் என்னும் செய்தி. எந்த வகையிலும் அது ஒரு ரஜினி படமாக இல்லை. ரஜினியை தவிர, இயக்குனர் உட்பட வேறு யாருக்கும் அந்தப் படத்தின் மீது முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால், ரஜினி உறுதியாக இருந்தார். வெளிவந்த பிறகு வெற்றி தேவைப்பட்ட ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியாகவும் லாபம் தேவைப்பட்ட சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபமாகவும் அமைந்தது சந்திரமுகி. ரஜினியின் ரசனை மீண்டும் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

rajnikanth

இதன்பிறகு ரஜினி இணைந்தது இயக்குனர் சங்கருடன். பிரம்மாண்ட வெற்றிகளால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த சங்கர் ரஜினியுடன் இணைந்தது தாமதமாகத்தான். இந்தியன், முதல்வன் இரண்டு படங்களுமே ரஜினியின் பெயர் கிசுகிசுக்கப்பட்டாலும் சிவாஜியில்தான் இணைந்தார்கள். இப்படி ரஜினி தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள் பெரும்பாலும் அனுபவமிக்கவர்களாகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்களாகவும் இருப்பர். ஆனால், இதன்பிறகு சில வருடங்களாக ரஜினியின் இயக்குனர் தேர்வு என்பது சற்று மாறியிருக்கிறது. பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருடன் இனைந்தது, ரஜினி அடுத்த தலைமுறை ரசிகர்களை சென்று சேர எடுத்த முடிவாகவும் மாறி வரும் சினிமா ட்ரெண்டை கவனித்ததன் விளைவாகவும் பார்க்கப்படுகிறது. இடையில் முருகதாஸ் என்ற அனுபவம் வாய்ந்த இயக்குனர் வந்தாலும் மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளார் ரஜினி. ஏற்கனவே சிறுத்தை, வீரம், வேதாளம் ஆகிய வெற்றிப்படங்களை சிவா இயக்கியிருந்தாலும் ரஜினியின் கவனத்தை ஈர்த்தது விஸ்வாசம்தான்.

அஜித் நடிப்பில் ஒரு குடும்பப் படமாக உருவாகி, தான் நடித்த பேட்ட படத்திற்கே விஸ்வாசம் டஃப் கொடுத்ததை ரஜினி ரசித்தார். கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் குடும்பங்களை சென்றடைந்ததை கவனித்த ரஜினி அப்படி ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயக்குனர் சிவாவை அழைத்திருக்கிறார். மீனா, குஷ்பு என ரஜினியின் பழைய நாயகிகள் நடிப்பது அண்ணாமலை, முத்து கால ரஜினி பட ஸ்டைலில் இந்த படம் வரும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

siruthai siva darbar rajnikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe