Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

அஜித், மன்றங்களைக் கலைத்தது இதனால்தானா?  

viswasam

விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் தராததால் பெற்ற தந்தையின் முகத்திலேயே பெட்ரோலை ஊற்றி எரித்திருக்கிறார் 20 வயது அஜித் குமார் என்ற இளைஞர். 50 அடி உயரமுள்ள கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய சாரத்தில் ஏறிய 6 இளைஞர்கள், சாரம் கீழே விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூரில் தியேட்டரில் சீட் பிடிக்க ஏற்பட்ட தகராறில் மாமன் மச்சான் இருவருக்கு கத்திக்குத்து நடந்திருக்கிறது. இதல்லாமல் பேனர்கள் கிழிப்பு, மோதல், ரகளை என்று பல செய்திகள் நேற்று வெளிவந்தன. இந்த செய்திகளில் பல விஸ்வாசம் படம் பார்க்க் சென்றவர்களால் நிகழ்ந்தது, அதாவது அஜித் ரசிகர்கள். தனது அபிமான நடிகரின் படம் ஒன்றரை வருடம் கழித்து வெளிவரும் உற்சாகத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதைக் கூட உணராமல் செய்துள்ளனர். இந்த செய்திகள் அனைத்துமே அஜித், விஸ்வாசம் என்ற இரண்டு வார்த்தைகளுடனேயே வெளிவருகின்றன, ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாத சம்பவங்களாக இருந்தாலும். 
 

தான் ஒருவருக்கு ரசிகனாக இருக்கின்றோம் என்பதைத் தாண்டி, பல சமயங்களில் மூடர்களாகிறோம் என்பது உரைக்காமல் நிகழும் நிகழ்வுகள் இவை. அதிலும் நேற்று நிகழ்ந்தவை, 'எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம்' என்று சொல்லியவரின் ரசிகர்கள் சிலரால்  நடந்தது என்றால் என்ன சொல்வது? அமைப்பு என்று ஒன்று வைத்து, ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து, இதுபோன்ற கொண்டாட்டங்களை ஊக்குவிக்கும் செயல்களை செய்யாதவர் அஜித். ஒரு பக்கம், அஜித் பெயரில் நூலகம் ஆரம்பித்திருக்கிறார்கள், நற்பணிகள் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட செய்திகள். இது, ஒரு நடிகர் விஷயத்தில் மட்டும் நடப்பதில்லை. பொதுவாகவே தமிழ்நாட்டில் திரை நட்சத்திரங்களின் ரசிகர்களில் ஒரு சிலர், இப்படிப்பட்ட பக்குவமற்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம்தான். இதையெல்லாம் ஊக்குவிக்கக்கூடாது என்பதற்காவே தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தார் அஜித்.    
  

2011 ஆம் ஆண்டு... தனது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன், 29 ஏப்ரல் அன்று நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்குக் கொடுத்த பிறந்த நாள் விருந்து, இந்த அறிவிப்பு.
 

ajith press release


விரும்பத்தகாத சில விஷயங்கள் நடப்பதால், மாநிலம் முழுவதும் இருந்த தன் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாகவும்,  நலத்திட்டங்கள் செய்வதற்கு நல்ல மனம் போதும், அமைப்பு தேவையில்லை  எனவும் கூறியிருந்தார் அஜித். அவரின் இந்த அறிவிப்பு, திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பிற நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும், விவாதங்களைத் துவக்கியது. அதுவரை, 'கிங் ஆஃப் ஓப்பனிங்' என்று அழைக்கப்பட்டவர் அஜித். அது அவரது ஐம்பதாவது படமான மங்காத்தா வெளிவர இருந்த நேரம். ரசிகர் மன்றங்களைக் கலைத்ததால் அந்தப் படத்திற்கு வழக்கமான ஓப்பனிங் இருக்காதென்றும், ரசிகர்கள் கோபமாய் இருப்பார்கள் என்றும் பேசப்பட்டது. அஜித் அமைதியாகவே இருந்தார். வெளிவந்தது மங்காத்தா. மிகப்பெரிய ஓப்பனிங்க் தந்தனர் அஜித் ரசிகர்கள். "மன்றத்தைக் கலைக்கலாம்... எங்கள் மனதைக் கலைக்க முடியாது" என்று தங்கள் 'தல'க்கு கூறினர் அவரது ரசிகர்கள். 
 

தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில், அஜித் எடுத்த அந்த முடிவு, எந்த பெரிய நடிகரும் எடுக்காதது, எடுக்கத் தயங்குவது! அவர் சொன்ன காரணம், யாரும்  மறுக்க முடியாதது, ஆனால் மறைத்து மூடுவது. நற்பணிகள் செய்ய மன்றங்கள் தேவையில்லை, அதே நேரம் நடிகர்கள் மன்றங்களை வைத்திருப்பது  நற்பணிகளுக்காக மட்டுமில்லை, தங்கள் மார்க்கெட்டுக்காகவும்தான். அவற்றைக் காட்டி, பின்னாளில் அரசியலில் நுழைந்த நடிகர்கள் பலர். மன்றங்கள் இருந்த போதும் கூட, வருடம்தோறும் ரசிகர் மன்ற கூட்டங்களோ, சந்திப்புகளோ நடத்தும் வழக்கமில்லை அவருக்கு. மன்றங்களைக் கலைத்ததன் மூலம், ரசிகர்களை எந்த விதத்திலும் பயன்படுத்த மாட்டேன் என்று நிரூபித்தார். ரசிகர்களும் அவரைப் புரிந்து கொண்டு அமைப்பில்லாமலேயே தொடர்ந்தனர். இதுபோல பல விஷயங்களுக்கு மற்றவர்கள் தன்னையும், தன் ரசிகர்களையும் பேசுவதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்றுதான் இந்த பெரிய முடிவை எடுத்திருந்தார் அஜித்.
 

ajith


ரசிகர்களை சந்திக்க மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், அதிகம் பேட்டிகள் தர மாட்டார், மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தவரில்லை, வரிசையாக வெற்றிகளை மட்டுமே கொடுத்தவரில்லை. ஆனாலும், எந்த மேடையிலும், இந்தப் பெயரை சொன்னால் அரங்கம் அதிர்கிறது. எந்த ரசிகனுக்கும் இவரைக் கண்டால் பரவசம் ஆகிறது. எந்தப் படத்திலும் இவரைக் காட்டினால் விசில் பறக்கிறது. விஸ்வாசம் வெளியீட்டுக்கு LEDயில் பேனர்கள், இதுவரையில்லாத நீளத்தில் தட்டிகள், கொண்டாட்டம்... என மன்றம் வைத்து, கூட்டங்கள் நடத்தி, ரசிகர்களை பராமரிக்கும் பலருக்கே நடக்காத, கிடைக்காத வரவேற்பைக் கொடுக்கிறார்கள். அந்த அன்பு உண்மைதான். இந்தக் கொண்டாட்டத்திற்கு இடையில் இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கின்றன. ஆனால், இதுவா அஜித் விரும்பியது? "வேலையும் குடும்பம்தான் முக்கியம். பிடித்திருந்தால் என் படங்களைப் பாருங்கள்" என்பதுதான் தன் மன்றங்களைக் கலைத்தபோது அஜித் சொன்ன வார்த்தைகள்.    
 

சமீபத்தில் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில், ‘அஜித் அவருடைய ரசிகர்கள் மீத் நிறைய அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். அவர்களை என்னுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று அடிக்கடி என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். ரசிகர்கள் அனைவரும் அவர் அவர் குடும்பங்களை பார்த்துகொண்டு எப்படி, இவர் தன்னுடைய வேலையில் முழு கவனங்கள் செலுத்தி உழைக்கிறாரோ. அதேபோல அவருடைய ரசிகர்களும் உழைக்க வேண்டும் என்பதே அஜித்தின் ஆசையா இருக்கிறது’ என்றார். இப்போதும் அஜித்தின் எதிர்பார்ப்பு இப்படிதான் இருக்கிறது. ரசிகர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்