இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று இரு பெரும் ஜாம்பவான்கள் போட்டிபோட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் 16 வயதில், அதிலும் இசை கற்றுக்கொள்ளாமல் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது தமிழ் திரையுலகில் அவருக்கென ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கிறார். அவரின் இசைக்காக உரிமைகொண்டாடும் ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார். தமிழ் திரையுலக இசையில் புதுமையான இசையை நமக்கு வழங்கியவர்களைத்தான் ரசிகர்களாகிய நாம் தூக்கிவைத்து கொண்டாடுகிறோம். அதுபோல, நமக்கு புதுமைகளை தந்தவர்கள்தான் இசைஞானி, ஆஸ்கர் நாயகன் தற்போது அந்த வரிசையில் யுவன் ஷங்கர் ராஜா. மேலும் அவரது இசையைக் கேட்கும்போதே நமக்குள் என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வை பரிசாய் தருகிறார். அதிலும் இவரின் காதல் தோல்வி பாடல்கள் கொடுக்கின்ற உணர்வு, காதலியை விட அந்த பாடலை அதிகம் காதலிக்க தூண்டும். ஏன் சிலர் விளையாட்டாக சொல்வதுண்டு- "யுவன் லவ் பெயிலியர் சாங் கேட்கவே யாரையாவது லவ் பண்ணி ப்ரேக்கப் ஆகணும்னு ஆசையாய் இருக்கு" என்று.

Advertisment

yuvan with illaiyaraja

1996ஆம் ஆண்டு வெளிவந்த 'அரவிந்தன்' படத்தின் மூலமாகத்தான் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகினார். அவர் இசையமைப்பாளராக அறிமுகமானபோது அவருடைய வயது 16, இசையை முறையாக கற்றுக்கொள்ளாதவர். அறிமுகமாகி முதல் இரண்டு வருடங்கள் அவர் இசையமைத்த படங்கள் சரியாக ஓடவில்லை, யுவனும் பலருக்கு தெரியவில்லை. இசைஞானியின் மகன் என்பதால் எளிதில் வந்துவிட்டார் என்ற பேச்சும் இருந்துள்ளது. இது அனைத்தையும் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தின் மூலம் தகர்த்தெறிந்தார். இதிலிருந்துதான் யுவனின் சகாப்தம் தொடர்ந்தது என்றும் சொல்லலாம். எட்டு பாடல்களை கொண்ட இப்படத்தில், யுவனின் புதுமை கேட்கும் அனைவரையும் ஈர்த்தது. பலரை காதல் வலையில் விழ செய்தது. இதற்கு பின் சத்தம் போடாதே படத்தில் சேர்ந்த இந்த கூட்டணி, மர்மத்தை அளிக்கும் பின்னணி இசையிலும், முழுக்க முழுக்க காதலிலும் நம்மை ஆட்கொண்டது. இந்த காலகட்டத்தில் யுவன் இசை என்றாலே உச்சம் என்னும் அளவுக்கு உருமாறியிருந்தது. இப்போதும் யுவன் இப்படத்தில் வரும் 'பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்' என்னும் பாடலை கேட்பவர்களின் மனதில் யுவன் பேசிக்கொண்டே இருக்கிறார். இப்படம் வெளியாகி ஆறு வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் மூன்று பேர் மூன்று காதல் என்னும் படத்தில் ஒன்று சேர்ந்தனர். படம் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கும். இயக்குனர் மணிரத்னம் என்றால் ஏ.ஆர். ரஹ்மான் என்று சொல்வதுண்டு. அதுபோல யுவன்ஷங்கர் ராஜாவுக்கு பல முன்னணி இயக்குனர்களான செல்வராகவன், அமீர், ராம், விஷ்ணு வரதன், வெங்கட் பிரபு என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். யுவனை இரு வகைகளாக இவர்கள் இடத்தில் பிரிக்கலாம் ஒன்று க்ளாஸ், மற்றொன்று மாஸ்.

yuvanshankar

Advertisment

செல்வராகவன் எடுத்த 'துள்ளுவதோ இளமை' படத்தை பார்க்க முதல் காரணமாக இருந்தவரும் யுவன்தான் என்று தனுஷ் பல இடங்களில் தெரிவித்திருக்கிறார். பள்ளி பருவ வயதை காட்சியிலும் அப்பாற்பட்டு இசையில் துள்ளலாக அமைத்திருப்பார் யுவன். இயக்குனர் செல்வராகவனும் யுவனும் ஜோடி சேர்ந்தாலே இளைஞர்களுக்கு ஒரு தாக்கம் ஏற்பட காத்திருக்கிறது என்றளவுக்கு இவர்கள இருவரின் ஒன்றான பயணம் அமைந்தது. காதல் கொண்டேனில் இவர் அமைத்த ஒவ்வொரு பின்னணி இசையும் நெஞ்சை உருக்கியது, தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் பாடல் அதன் வரிக்கேற்ப காதலில் கண்ணைமூடிக்கொண்டு விழ செய்தது. காதலில் விழுந்தவர்கள், அதிலேயே மீண்டும் சிக்கித்தவிக்க 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை என்னும் பாடலில் காதலை புரியாமலே சுற்றவிட்டது. எந்த ஒரு காதல் உணர்வாக இருந்தாலும் சரி அதில் இவர்கள் கூட்டணி ஆழ்கடலில் உல்லாசமாக நீச்சல் போட்டது. 'புதுப்பேட்டை'படத்தில் காதலையும் தாண்டி, யுவனின் இசை ஒரு வாழ்க்கை போதனையாகும் அளவிற்கு உருமாறியது. ஒரு நாளில் வாழ்கை என்னும் பாடல் கேட்டுப்பாருங்கள் வாழ்க்கையின் தனிமை புரியும். இப்பாடல் படத்தில் வரவில்லை என்றாலும், தனியாக வெளியே வந்து இளைஞர்களின் மனதை அழவைத்தது என்றே சொல்லலாம். இதன் பிறகு யார் கண் பற்றதோ தெரியவில்லை இவர்கள் இருவரும் சில மனஸ்தாபத்தில் பிரிந்தனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து எந்த ஒரு தாக்கத்தையும் தரவில்லை. மீண்டும் பல வருடங்கள் கழித்து 'நெஞ்சம் மறப்பதில்லை', சூர்யா நடிப்பில் என்.ஜி.கே என்று ஒன்று சேர்ந்துள்ளனர். இதில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பாடல்கள் வெளியாகிவிட்டன இருந்தாலும் பழைய தாக்கம் இல்லை என்றே ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது. கண்டிப்பாக என்.ஜி.கே வில் இவர்கள் கூட்டணியில் வரும் பாடல்கள் மீண்டும் காதலில் விழ செய்யும், காதல் தோல்வியையும் கூட அமிர்தமாக அனுபவிக்க இவரின் இசை கைகொடுக்கும்.

செல்வராகவனுக்கும் யுவனுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பதுபோல, இயக்குனர் ராமுக்கும் யுவனுக்கும் இருக்கிறது. 'கற்றது தமிழ்' படத்தில் 'பறவையே எங்கிருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய்' எனும் பாடலை என்னவென்று சொல்வது. பயணத்தின் போது இந்த இசையை கேட்டாலே காதலிக்காகத்தான் நாம் பயணிக்கிறோமோ என்கிற உணர்வை கொடுத்துவிடும். ராமின் அடுத்த படமான தங்கமீன்களிலும் யுவன்தான் இசை அமைத்தார். 'ஆனந்த யாழை' பாடல், அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை வெளிப்படுத்துவது. அதனால் இதில் நா.முத்துக்குமாரின் வரிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இசையை அமைத்தார். இப்பாடலுக்கு தேசிய விருதே கிடைத்தது. இதுவரை ராம் 4 படங்கள் இயக்கியுள்ளார், அந்த 4 படத்திற்கும் யுவன்தான் இசை. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுமை, தாக்கம் என்றிருக்கிறது இவர்கள் இருவரின் கூட்டணி. கோடிக்கணக்கில் பணம் பெற்றாலும் என்னிடம் யுவன் நான் கொடுப்பதைத்தான் வாங்கிக்கொள்வார். இது குறைந்த பட்ஜெட் படம் எப்படி உங்களுக்கு நான் சம்பளம் தருவது என்று யோசித்தாலும் நான் இப்போ உங்களிடம் காசை பற்றி பேசினேனா என்று கேட்கும் மனம் படைத்தவர் என்று கூறுவதுண்டு. இதுபோன்ற உள்ளமும் கொண்டவர் யுவன்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இதுவரை அமீர் எடுத்த படங்கள் அனைத்திலுமே யுவன்தான் இசை. மௌனம் பேசியதே தொடங்கி ஆதிபகவன் வரையிலும் யுவன்தான் அமீருக்கு ஆஸ்தான இசையமைப்பாளர். ஹிப்ஹாப், ரேப், நவீன இசையாக மாறிவரும்போது, யுவனுக்கு முழுக்க முழுக்க நாட்டுப்புற இசை வேண்டும் என்று இசை அமைக்கவைத்தவர். பாரதிராஜாவின் 'கிழக்கு சீமையிலே' படம் மூலம் எனக்கு நாட்டுப்புற இசையும் தெரியும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் நம்மை எப்படி அதிரவைத்தாரோ யுவனும் அப்படியே அதிரவைத்தார். கிராமத்து திருவிழாவில் அவரது இசையின் மூலம் கலந்துகொள்ள வைத்தார். வயல்வெளிகளில் காதல் பாடல் கேட்கவைத்தார். தமிழ் சினிமாவில் அம்மா செண்டிமெண்ட் பாடல் ஒவ்வொரு இசைசையமைப்பாளருக்கும் ஒன்று உண்டு, அதுபோல அமீரின் ராம் படத்தில் போட்ட ஆராரிராரோ என்ற பாட்டில் தாயின் பாசத்தில் கண்கலங்க வைத்தார். இதுவரை சொல்லப்பட்ட இயக்குனர்களுடன் யுவன் இசையை க்ளாஸ் என்று சொல்லலாம்.

yuvan with venkat

யுவன்பல இயக்குனர்களுக்கு மாஸாக இசை அமைத்துள்ளார். அதில் இருவர் சிறப்பு என்று சொல்லலாம், ஒருவர் விஷ்ணுவர்தன் மற்றொருவர் வெங்கட் பிரபு. விஷ்ணுவர்தனுடன் இவரது இசை ஒவ்வொன்றும் அந்த படத்தில் நடிக்கின்ற ரசிகர்களையும் ரசிக்க வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். அப்படி இவர் பில்லாவுக்கு போட்ட தீம் வேற லெவல். அறிந்தும் அறியாமலும் படத்தில் வரும் தீப்பிடிக்க தீப்பிடிக்க.... செம, பட்டியல் படத்தில் வரும் காதல், குத்து என்று அனைத்து வகை பாடல்களிலும் வெளுத்துக்கட்டியிருப்பார். இதேதான் வெங்கட் பிரபு படங்களுக்கும், வெங்கட் பிரபு இவருடைய அண்ணன் என்பது ஒரு சிறப்பு. தமிழ் படத்தில் வந்த சிறந்த தீம்களில் முதலாம் இடம் கண்டிப்பாக யுவன் இசையில் வந்த மங்காத்தாவாகத்தான் இருக்கும். அதுபோல, இளைஞர்களை கவரும் பார்ட்டி பாடல்கள், நட்பு பாடல்கள் என்று எல்லாம் கலந்த மசாலாவாக சிறப்பாக இருக்கும்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

யுவன் இவர்களுக்கு மட்டும்தான் சிறப்பான இசை அமைத்தாராஎன்றால் இல்லை, இவர்களை தாண்டியும் பலருக்கு, இவ்வளவு ஏன் அறிமுகமாகாத இயக்குனர்களுக்கு கூட குறைந்த அளவிலான பணத்தை பெற்றுக்கொண்டு இசை அமைத்து, அந்த படத்திற்கு ஒரு புரொமோஷனாகவும் இருந்திருக்கிறார். காதல் பாடல்களில் யுவனின் இசை தரும் உணர்வுகள் அனைவருக்கும் சமமாகவே வழங்கியிருக்கிறார். யுவன் பியானோ கற்றுக்கொள்ளக்கூட நான்கு நாட்கள்தான் சென்றாராம். அவர் 90ஸ் கிட்ஸின் பால்ய வயதை தன்னுடைய இசையின் மூலம் திக்குமுக்காடச் செய்தவர். யுவன் ஷங்கர் ராஜா, இளைஞர்களின் ராஜா. தற்போது அவரே படத்தை தயாரித்து வெளியிடும் அளவிற்கு இந்த தமிழ் சினிமாயுலகில் வளர்ந்துவிட்டார். மீண்டும் மீண்டும் அவருடைய இசையில் தாக்கம் ஏற்பட்டு, அதை ரசித்து ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும் அளவிற்கு ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார் யுவன் என்னும் இளைஞர்களின் காதல் இளவரசன்.