தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் விரைவில் விக்ரம் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
விக்ரம் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அவரின் மேலாளர் சூர்யநாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில் "அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சியான் விக்ரமிற்கு லேசான மார்பு அசௌகரியம் இருந்தது. இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.