நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்துள்ள படம் ‘கிஸ்’. ரோமியோ பிக்சர்ஸ் பேனரில் ராகும் தயாரித்துள்ள இப்படத்தில் விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இவரது இசையில் அனிருத் குரலில் வெளியான ‘திருடி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் முன்னதாக வெளியான நிலையில் நேற்று படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விடிவி கணேஷ் கலந்து கொண்டு இயக்குநர் சதீஷ் குறித்து பேசுகையில், “பீஸ்ட் படத்தில் சதீஷுக்காகவே விஜய், சீக்கிரம் செட்டுக்கு வந்துவிடுவார். சதீஷ் செய்யும் பெர்ஃபாமன்ஸை அவர் அப்படி பார்த்து சிரிப்பார். அந்த படத்தை என்னால் மறக்கவே முடியாது. அதில் லிஃப்ட் சீனில் நான் பேசிய ‘தூ...’ என்ற ஒரே ஒரு வார்த்தை டாப் தெலுங்கு ஹீரோக்கள் அனைவரிடமும் நடிக்க வைத்து விட்டது. அதற்காக விஜய்க்கு நான் நன்றி சொல்கிறேன். முதலில் எனக்கு அந்த சீனில் டயலாக் இல்லாமல் இருந்தது. உடனே நெல்சனிடம் கேட்டேன். நான் கேட்பதை விஜய் பார்த்துவிட்டு எனக்கு டயலாக் கொடுக்க நெல்சனிடம் சொன்னார். அதன் பிறகு தான் அந்த சீனில் எனக்கு முன்னாடி இருந்த சதீஷை பார்த்து ‘தெய்வீக குழந்தை’ என சொல்லிவிட்டு ‘தூ’ எனத் துப்புவேன். இது அங்கு நிறைய பேருக்கு பிடித்துவிட்டது.  

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் பிரம்மானந்தம் கூட என்னை பார்த்து, எப்படி ஒரே ஒரு வார்த்தையை வைத்து இவ்வளோ தூரம் வந்துருக்கன்னு கேட்டார். அந்தளவு பீஸ்ட் படத்தில் லிப்ட் சீனில் நான் பேசிய வசனம் பிரபலமாகியிருக்கிறது. கிஸ் படத்தின் தெலுங்கு டீசரை பார்த்தேன். அதில் எனக்கு பதிலாக மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவர் பேசியிருக்கார். இதை சதீஷிடம் கேட்டால், நீங்க பிஸியா இருந்தீங்க, அதான் யாரையோ போட்டுட்டாங்க, எனக்கே தெரியலைன்னு என சொல்லிவிட்டார்” என்றார். உடனே சதீசை பார்த்து, இதெல்லாம் தப்பு சதிஷ், நானே டப் பண்ணி கொடுத்துடுறேன் என சொன்னார்.