
யூட்யூபில் பிரபல சேனல்களில் ஒன்று ‘வி.ஜே. சித்து விலாக்ஸ்’. இவர்களின் வீடியோவிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கையில் இதில் வரும் வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது வி.ஜே. சித்து இயக்குநராக உருவெடுத்துள்ளார். மேலும் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதன் அறிவிப்பு படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இதனை தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டைட்டில் அறிவிப்பு வீடியோவில் வி.ஜே. சித்து மற்றும் அவரது அப்பாவாக வரும் இளவரசு இருவரும் வேல்ஸ் பல்கலைக்கழகம் வளாகத்திற்கு அதன் வேந்தர் ஐசரி கணேசை சந்தித்து படத்திற்கான கதையை சொல்வதற்காக செல்கின்றனர். பின்பு உள்ளே சென்றதும், ஐசரி கணேஷ், கதையை கேட்காமல் வி.ஜே. சித்துவின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை கேட்கிறார். பின்பு இளவரசு பட வாய்ப்பு கேட்டு வந்திருப்பதாக சொல்ல ஷாக்கான ஐசரி கணேஷ் அவரை வெளியே நிற்க சொல்கிறார். பிறகு உள்ளே இருக்கும் வி.ஜே. சித்து, அவரது யூட்யூப் சேனல் வீடியோவை பார்க்க சொல்ல அதை பார்த்து ஐசரி கணேஷ் அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறார். பின்பு படத்தின் பெயர் பயங்கரமா இருக்கவேண்டும் என சொல்ல ‘டயங்கரம்’ என தலைப்பு வருகிறது. மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.