தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வி.ஜேவாக பணிபுரிந்து அதன் மூலமாக பிரபலமடைந்தவர் வி.ஜே. மணிமேகலை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளராக உள்ள உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கரோனாவால் தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இருவரும் வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் இருந்தாலும் மதம் மாறாமல் அவரவர் மதத்தைப் பின்பற்றியே இணைந்து வாழ்ந்து வருவதாகப் பலமுறை தெரிவித்திருக்கிறார் வி.ஜே. மணிமேகலை. இந்நிலையில் ராம்ஜான் அன்று வி.ஜே. மணிமேகலை இஸ்லாமிய பெண்போல புர்கா அணிந்து தனது கணவருடன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தைப் பதிவிட்டார்.
இந்தப் பதிவில் ரசிகர் ஒருவர் “எப்படியோ ஒருவழியாக மதம் மாற்றிவிட்டார். இதற்குப் பெயர்தான் லவ் ஜிகாத்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த மணிமேகலை, "ரம்ஜான் வாழ்த்து சொல்றதுக்கெல்லாம் மதம் மாறி விட்டுத்தான் சொல்லனுமா. யாரும் இங்கு கன்வெர்ட் ஆகவில்லை. என்னுடன் அவர் கோயிலுக்கு வருகிறார். நாங்கள் இருவரும் ரம்ஜான் கொண்டாடுகிறோம். நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம். உங்களது தேவையில்லாத குழப்பங்களை இங்கே கொண்டு வர வேண்டாம். நன்றி" என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.