Skip to main content

'ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது' - விவேக் ருசிகரம் 

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
vivek

 

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. நடிகர்கள் விவேக், தேவயானி இணைந்து நடித்துள்ள இப்படத்தில் அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 18ம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு வெளிவர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். அப்போது விழாவில் நடிகர் விவேக் பேசும்போது...

 

 

 

"அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. 'எழுமின்' அன்று தான் ரிலீஸ். இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம், லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர். இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார். மேலும் 18ஆம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி 2’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்