பாலிவுட்டில் சில படங்களை இயக்கியிருந்தாலும் ‘ஃபைல்ஸ்’ என வரும் தலைப்பில் சர்ச்சையான விஷயங்களை கையிலெடுத்து வருகிறார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இதுவரை ‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ மற்றும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ஆகிய இரண்டு சர்ச்சையான படங்களை எடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு வெளியான ‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ படத்தில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் குறித்து பேசியிருந்தார். இப்படம் தேவையற்ற சர்ச்சையை உருவாக்க முயல்வதாகவும், பலரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன், பட வெளியீட்டுக்கு எதிராக விவேக் அக்னிஹோத்ரிக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தார். 

Advertisment

இப்படத்தை அடுத்து 2022ஆம் ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் 90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள், குறித்து பேசியிருந்தார். இப்படம் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் கடும் எதிர்ப்பை படம் சந்தித்தது. கடந்த 2022ஆம் ஆண்டு கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட் இப்படத்தை பார்த்து வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாக மேடையிலேயே விமர்சித்திருந்தார். 

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து ‘ஃபைல்ஸ்’ என வரும் தலைப்பில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள மூன்றாவது படம் ‘தி பெங்கால் ஃபைல்ஸ்’. இப்படம் 1946ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார், சிம்ரத் கவுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் இந்தியில் மட்டும் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படமும் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 

படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. ஆனால் இதன் வெளியீட்டு நிகழ்ச்சி கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் முதலில் ரத்து செய்யப்பட்டு பின்பு வேறு ஒரு இடத்தில் நடந்தது. அதுவும் பாதியிலே காவல் துறையினரால் நிறுத்தப்பட்டது. ட்ரெய்லரில் வங்கத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் கோபால் முகர்ஜியை தவறாகச் சித்தரித்துள்ளதாக கோபால் முகர்ஜியின் பேரன் சாந்தனு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விவேக் அக்னிஹோத்ரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தான் குறிவைக்கப்பட்டு கொலை மிரட்டலுக்கு ஆளாகுவதாக விவேக் அக்னிஹோத்ரி ஒரு நேர்காணலில் தெரிவித்தார். இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என மேற்கு வங்கத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

Advertisment

இப்படி தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் இப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதால், தற்போது ஒரு கோரிக்கையை விவேக் அக்னிஹோத்ரி வைத்துள்ளார். அதாவது படத்தை மேற்கு வங்கத்தில் தடை செய்யக்கூடாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த படத்தை அரசியல் ரீதியாக பார்ப்பதை விட கலை ரீதியாக பார்க்க வேண்டும். படத்தில் பேசிய விஷயங்கள், மக்கள் பார்த்து சரியா தவறா என்பதை முடிவு செய்ய வேண்டும், அதற்காக அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க வேண்டும். உங்களின் கட்சி தொண்டர்கள் படத்தை திரையிடக்கூடாது எனத் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டு வருகின்றனர். இது மறைமுக தடைக்கு வழிவகுக்கிறது.

ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும், பேச்சுரிமையையும் பாதுகாப்பதாக இந்திய அரசியலமைப்பின் மீது நீங்கள் உறுதிமொழி எடுத்துள்ளீர்கள். அதனால் படத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒரு ஜப்பானிய குழந்தை ஹிரோஷிமா மற்றும் நாகசாகி படுகொலைகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றால் நம் நாட்டு குழந்தைகள் கொல்கத்தா கலவரத்தைப் பற்றி ஏன் தெரிந்திருக்கக்கூடாது. ஏன் இந்த இந்து இனப்படுகொலையை நாம் மறைக்க வேண்டும். ஒரு உண்மையான வங்காளி படத்தைத் தடை செய்ய மாட்டார். அதனால் தயவுசெய்து இந்தப் படத்தைத் தடை செய்யாதீர்கள் என கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.