/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/139_31.jpg)
நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம்1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், “இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்கிறார். லவ் ஜிகாத் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஃபர்ஹான் கதாபாத்திரம் (ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துகிறார். ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி நடக்கவுள்ளதால், இந்து மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் மேல் வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மேல் போலீஸார்வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், அன்னபூரணி படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தினர். அதில் ராமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றதாக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே அன்னபூரணி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானஜீ ஸ்டூடியோஸ்,மத உணர்வுகளை புண்படுத்தும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை எனத்தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் இணை தயாரிப்பாளர்களான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.மேலும் அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் புண்படுத்தப்பட்டதற்கும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)