Skip to main content

நயன்தாரா படத்திற்கு எதிராகப் போராட்டம் - படக்குழு எடுத்த அதிரடி முடிவு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Vishva Hindu Parishad protest against nayanthara annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், “இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்கிறார். லவ் ஜிகாத் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஃபர்ஹான் கதாபாத்திரம் (ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துகிறார். ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி நடக்கவுள்ளதால், இந்து மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் மேல் வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மேல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், அன்னபூரணி படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தினர். அதில் ராமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றதாக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதனிடையே அன்னபூரணி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டூடியோஸ், மத உணர்வுகளை புண்படுத்தும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் இணை தயாரிப்பாளர்களான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. மேலும் அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் புண்படுத்தப்பட்டதற்கும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.