நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்தது. அதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.
பின்பு 2023ஆம் ஆண்டு ஆமிர் கான் சென்னையில் தனது தாய் சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில் அப்போது ஏற்பட்ட வெள்ளத்தால், அவர் தவித்துக்கொண்டிருந்த போது, விஷ்ணு விஷால் உதவியாக இருந்தார். இதனால் இருவருக்குள்ளும் நட்பு உருவாக விஷ்ணு விஷாலுக்கு குழந்தை இல்லாதது குறித்து ஆமீர் கானுக்கு தெரியவந்துள்ளது. பின்பு விஷ்ணு விஷால் மற்றும் அவரது மனைவி ஜுவாலா கட்டாவை மும்பைக்கு வரவழைத்து அவருக்கு தெரிந்த மருத்துவர்களிடத்தில் அனுப்பிவைத்துள்ளார். அதன் பலனாக கடந்த ஏப்ரல் மாதம் அந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ஆமிர் கான் தான் ‘மிரா’ என்று பெயர் வைத்தார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா 30 லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார். “தாய்ப்பால் உயிர்களைக் காப்பாற்றுகிறது. குறை பிரசவம் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு, தானமாக கொடுக்கும் தாய்ப்பால் அவர்களின் வாழ்க்கையை மாற்றும். நீங்கள் தானம் செய்ய முடிந்தால், அது தேவைப்படும் குடும்பத்திற்கு நீங்கள் ஒரு ஹீரோவாக இருக்கலாம். இது குறித்து அதிகம் தெரிந்து கொள்ளுங்கள், அதை உலகுக்கு பகிருங்கள் மற்றும் பால் வங்கிகளுக்கு ஆதரவளியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.