Advertisment

விஷ்ணு விஷால் பகிர்ந்த குடும்பக் கதை; மேடையில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம்

36

ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் ருத்ரா, மிதிலா பால்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. படத்தின் நாயகன் ருத்ரா விஷ்ணு விஷாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ருத்ரா, மிதிலா பால்கர், மிஷ்கின், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் தனது குடும்பக் கதையை பகிர்ந்தார். அவர் பேசியதாவது, “ருத்ரா என்னுடைய பெரியப்பா பையன். சொந்த தம்பி கிடையாது. அப்பா மற்றும் பெரியப்பா இருவரும் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அப்பா நன்றாக படிப்பார். பெரியப்பா சினிமா ஆர்வமிக்கவர். ஆனால் இருவரும் எல்லா படத்தையும் முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்து விட வேண்டும் என ஆசைப்படுவர்கள். ஆனால் காசு இல்லாத காரணத்தினால் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் எடுத்து முதல் பாதி பெரியப்பாவும் இரண்டாம் பாதி அப்பாவும் பார்ப்பார்கள். இரண்டு பேரும் பார்த்துவிட்டு மீதி கதையை இருவரும் பேசி முழுக்கதையை தெரிந்து கொள்வார்கள். இப்படிப்பட்ட குடும்பம் தான் எங்க குடும்பம்.  

பின்பு எங்க அப்பாவிடம் மேற்படிப்பு படிக்க காசில்லை. அதனால் பெரியப்பா அப்பாவிடம், நான் போய் வேலை பார்க்குறேன், அந்த காசுல நீ படின்னு சொன்னார். அப்படி பெரியப்பா கூலி வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில்தான் அப்பா படித்தார். பின்பு ஐ.பி.எஸ். ஆனார். அப்படி படிக்க வைத்த பெரியப்பாவின் மகன் தான் ருத்ரா. அதனால் ருத்ராவை அறிமுகக்ப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாங்க கூட்டு குடும்பமாகத்தான் இருக்கிறோம். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகளை கல்யாணம் செய்து கொண்டனர். அதற்கு காரணம், வெளியில் பொன்னு எடுத்தால் நம்மை பிரித்துவிடுவார்கள் என அப்பாவும் பெரியப்பாவும் யோசித்தது தான். அப்பா லவ் பண்ணார். அதே வீட்டில் தங்கச்சி இருப்பதை அறிந்து பெரியப்பா அவங்களை அரேஞ்ச் மேரேஜ் பண்ணினார். 

அப்பா ஐ.பி.எஸ்ஸாக வேலை பார்த்த போது நிறைய தயாரிப்பாளர்களின் பழக்கம் கிடைத்தது. அதனால் அதை பெரியப்பாவிடம் சொல்லி நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லியிருக்கார். அதன் மூலம் சில படங்களில் பெரியப்பா நடிக்கவும் செய்திருக்கார். ஆனால் கேமரா முன்பு அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை. அதனால் அவரது கனவை அவரால் அடைய முடியாமல் போனது. அவருடைய ஆசைதான் நான் நடிக்க வந்தேன். அவர்தான் என்னை சினிமாவுக்குள் தள்ளிவிட்டார். பின்பு அவரது மகனையும்(ருத்ரா) தள்ளிவிட்டார்” என்றார். பின்பு அவரது பெரியப்பாவை மேடைக்கு வரவழைத்தார். மேடை ஏறிய அவர் மைக் முன் பேச முயற்சித்த போது பேசமுடியாமல் கண்கலங்கி எமோஷ்னலானார்.  அவரை விஷ்ணு விஷால் மற்றும் ருத்ரா ஆகியோர் கட்டியணைத்து தேற்றினர். பின்பு விஷ்ணு விஷாலின் அப்பாவும் மேடைக்கு வரவழைக்கப்பட்டு நான்கு பேரும் மேடையை பகிர்ந்து கொண்டனர். இந்த நெகிழ்வான தருணம் நிகழ்வின் ஹைலைட்டாக அமைந்தது.

actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe