
'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'நான் மகான் அல்ல', 'குள்ளநரிக் கூட்டம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஹரி வைரவன், சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். இது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் சூரி, இயக்குநர் சுசீந்திரன், அப்புக்குட்டி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், ஹரி வைரவன் குழந்தையின் படிப்பு செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது, "வைரவனும் நானும் நெருங்கிய நண்பர்கள். கடந்த ஆறு மாதங்களாக அவருடன் டச்-ல தான் இருந்தேன். என்னால் இயன்ற உதவியை கடந்த ஆறு மாதங்களாகச் செய்து வந்தேன். அவரின் மனைவியிடம் பேசினேன். எந்த ஒரு உதவினாலும் நான் செய்கிறேன். கவலைப்படாதீங்க. குழந்தையின் படிப்பு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியுள்ளேன்.
வைரவனின் கடைசி வாய்ஸ் மெஸேஜ் கூட என்கிட்ட இருக்கு. அதைத் திருப்பியும் நேற்று பிளே பண்ணி கேட்டேன். என்னை எப்போதும் மாப்ளனு தான் கூப்பிடுவார். அந்த மெசேஜில் தேங்க் யூ மாப்ள. நீ எனக்கு உதவி செய்றது ரொம்ப சந்தோஷம் எனச் சொல்லி இருந்தார். இது தொடர்பாக நடிகர் சங்கமும் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.