"இந்தியா பெருமை சேர்க்கவில்லையா" - விஷ்ணு விஷால் ஆவேசம்

vishnu vishal questioned virendar shewag

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம்18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எக்ஸ் தளப்பக்கத்தில் இந்தியா என்ற சொல்லிற்குப் பதில் பாரதம் என்று அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலஅரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அமிதாப் பச்சன், "பாரத் மாதா கீ ஜே" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் மற்றும் எங்கள் உண்மையான பெயர் 'பாரத்'. அதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ-யை வலியுறுத்துகிறேன்" எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை நடிகர் விஷ்ணு விஷால் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இத்தனை வருடங்களில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா" என சேவாக்கை கேள்வி கேட்டுள்ளார்.

actor vishnu vishal India virender sehwag
இதையும் படியுங்கள்
Subscribe