ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் ருத்ரா, மிதிலா பால்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. படத்தின் நாயகன் ருத்ரா விஷ்ணு விஷாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ருத்ரா, மிதிலா பால்கர், மிஷ்கின், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், “விஷ்ணு விஷால் தனது தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று என்னை முன்பு சந்தித்தபோது சொல்லியிருந்தார். இப்பொழுது மேடையில் அவரது கதையை கேட்ட பின்பு அந்த வார்த்தையின் அர்த்தமும் கனமும் புரிகிறது. அவரது வாழ்க்கையின் நல்ல விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது எங்களுக்கும் அது மகிழ்ச்சியை கொடுக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்திருப்பவர்களின் ரிதமும் நண்பர்களை போலவே இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார். 

Advertisment

நடிகர் ருத்ரா பேசுகையில், “இந்த தருணத்திற்காக தான் பல நாட்கள் காத்திருந்தேன். கனவு நனவாகி விட்டது. அண்ணன் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்பது கார்த்தி சாரை பார்த்து தான் ஐடியா வந்தது. இந்த மேடை எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.