தென்னிந்திய நடிகர் சங்க புது கட்டடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முழுவதுமாக கட்டி முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நடிகர் சங்கம். அந்த வகையில், வங்கியில் ரூ. 40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை கடந்த மாதம் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன்ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார்.
அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வங்கிக் கணக்கு மூலம் நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்திருந்த நிலையில் சங்க பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி என சொன்னால் அது இரண்டு வார்த்தைகளில் அடங்கிவிடும். ஆனால் இதயத்திலிருந்து ஒரு உதவியை செய்யும் நபருக்கு அது போதாது. அவரது உதவி நிறைய அர்த்தத்தை குறிக்கிறது.
நடிகர் சங்க புதிய கட்டட மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி கொடுத்த, எனக்கு பிடித்த நடிகர் விஜய்யை பற்றி பேசுகிறேன். உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்போது பணிகளை விரைந்து முடிக்க நீங்கள் எங்களுக்கு வலிமை அளித்துள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் விஜய் எப்போதும் தனது ரசிகர்களை அழைக்கும் வார்த்தையான நண்பா என்ற வார்த்தையை குறிப்பிட்டு, “நன்றி நண்பா” எனக் குறிப்பிட்டுள்ளார்.