படப்பிடிப்பு பகுதியில் மக்கள் கோரிக்கை - உடனடியாக தீர்த்துவைத்த விஷால்

vishal resolved people problem in shooting spot

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் இன்றுடன் 25வது நாளை கடக்கிறது. வினோத் குமார் தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை கடந்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் இந்தி பாதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக ஒரு பரபரப்பு புகாரை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த படத்தை அடுத்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் வாழும் மக்களின் குறைகளை விஷால் நிறைவேற்றியுள்ளதாக நடிகர் கயல் தேவராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் விஷால் 34வது படப்பிடிப்பு நடந்து வருகிறது. எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி மக்கள் விஷாலை சந்தித்து, குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக சொன்னார்கள்.

உடனே விஷால், அவரது மேலாளர் மற்றும் மக்கள் நல இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரகாஷ் ஆகியோர் எம்.குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பிறகு விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் அங்கு ஆழ்துளை கிணறு பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி கூறி பாராட்டு தெரிவித்தனர்" என குறிப்பிட்டு அது சம்பந்தமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

actor vishal director hari Thoothukudi vishal 34
இதையும் படியுங்கள்
Subscribe