மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் விஷால் ஈடுபட்டு வருவதாகவும், முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தனது அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஷால். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸை ராஜ்பவனில் சந்தித்துள்ளார் விஷால். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸை ராஜ்பவனில் சந்தித்து உணவருந்தியது மகிழ்ச்சியான தருணம். இவர் கொல்லத்தில் முதல் போட் ஹவுஸ் உருவாக்கி, கேரளாவுக்கு கடவுளின் சொந்த நாடு என்ற பெயரைச் சூட்டி, சுற்றுலாத்துறையில் எழுச்சியை ஏற்படுத்தியவர். மேலும் தாழ்த்தப்பட்டோருக்கு வீடு, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் போன்ற பல திட்டங்களை முன்னின்று நடத்தியவர் என்பது பலரும் அறியாத அற்புதமான ஆளுமை.
எங்கள் திரையுலகப் பிரச்சனைகளைக் கேட்க நேரம் ஒதுக்கியதற்கும், அதை எங்கள் பிரதமருக்கு எடுத்துச் சென்று எங்கள் திரைத்துறைக்கு நிவாரணம் தருவதாக உறுதியளித்ததற்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மார்க் ஆண்டனி பட இந்தி பதிப்பினை வெளியிட தணிக்கை வாரியக் குழு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்தார் விஷால். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.