விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டிஎஸ்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. அதில் உயிர் தப்பிய விஷால் "சில நொடிகளில் வாழ்க்கையை தவறவிட்டிருப்பேன்" என பதிவிட்டிருந்தார்.
இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் விஷால். அப்போது மார்க் ஆண்டனி டீசரை விஜய்க்கு காண்பித்துள்ளார். டீசரை பார்த்த விஜய் படக்குழுவை பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், டீசர் பார்த்ததற்குவிஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் ரசிகராக இருப்பது எப்போதும் பெருமை என குறிப்பிட்டுள்ளார்.
'மார்க் ஆண்டனி' படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.