மாணிக்கம் தயாரிப்பில் விக்னேஷ், மனிஷா ஜஷ்னானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் ராம் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஷாலும் கலந்து கொண்டார்.
மேடையில் பேச வந்த விஷால் மைக்கை பிடித்து கை நடுங்கியபடி நடித்தே பேசினார். பின்பு அதற்கு விளக்கம் கொடுத்த அவர், மதகஜராஜா பட விழாவில் நான் கை நடுங்கி பேசியது எப்படி வைரலாகி படத்தின் வெற்றிக்கு உதவியதோ அதைப்போல் இப்போது நான் கை நடுங்கியபடியே பேசிய வீடியோ வைரலாகி ரெட் ஃப்ளவர் படமும் ஹிட்டாக வேண்டும். அதனால் தான் இந்த செயலை நான் செய்தேன்.
எனக்கு பிடித்த அரசியல் வாதிகள் இரண்டு பேர். ஒன்று பகத் சிங். இன்னொன்று சுபாஸ் சந்திர போஸ். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கிய பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இன்னும் மூன்று மாத காலகட்டத்தில் நடிகர் சங்க புதிய கட்டிடத்தைக் கட்டி முடித்துவிடுவோம். பின்பு பத்திரிக்கையாளர்களுக்கு அது நல்ல ஆடிட்டோரியமாக இருக்கும். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். மேலும் வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன். அதாவது இனிமேல் படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டர் வளாகத்தின் உள்ளே பப்ளிக் ரிவ்யூவ் எடுக்க விடாதீர்கள். வளாகத்திற்கு வெளியே எடுத்துக் கொள்ளட்டும். விமர்சனம் முக்கியம் தான. ஆனால் முதல் 12 காட்சிகளுக்கு அது வேண்டாம்” என்றார்.
பின்பு அவரிடம் திருமணத் தேதி தள்ளி போவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், “9 வருஷம் எப்படியோ தாக்கு பிடித்துவிட்டேன். இன்னும் இரண்டு மாதம் தானே. என்னுடைய பிறந்தநாள் அன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். சங்க கட்டிடம் முடிந்த பிறகு அதில் முதல் கல்யாணம் என்னுடையது தான். ரொம்ப தள்ளிப் போகவில்லை. கூடிய சீக்கிரம் நடக்கும்” என்றார்.
கடந்த மாதம் தன்ஷிகா நடித்த ‘யோகி டா’ பட விழாவில் நடிகர் சங்க புதிய கட்டிடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பின்பு ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாகவும் விஷால் தெரித்திருந்தார். மேலும் தனது வருங்கால மனைவி தன்ஷிகா தான் என அறிவித்திருந்தார். இந்த திருமணம் தற்போது தள்ளிப் போகிறது.