விஷால் வழக்கில் ஆய்வறிக்கை தாக்கல் 

vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் படம் வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷால் வழங்க வேண்டிய நிலுவைச் சம்பளமான ரூ.2. 60 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் விஷாலின் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பல கட்டங்களாக நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கு தொடர்பாக விஷால் - லைகா இருவருக்கும் இடையிலான பண பரிவர்த்தனை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மூன்று ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி இருவருக்குமான

பண பரிவர்த்தனை குறித்த ஆய்வறிக்கையை ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டும் எனக் கோரி, விசாரணையை தள்ளிவைக்க விஷால் தரப்பு கேட்டுக் கொண்டது. பின்பு வழக்கு விசாரனை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

actor vishal lyca MADRAS HIGH COURT
இதையும் படியுங்கள்
Subscribe