/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/359_13.jpg)
நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் படம் வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த செப்டம்பரில் நடந்த விசாரணையில் விஷால் நேரில் ஆஜராகியிருந்த போது அவரை குறுக்கு விசாரணை நடத்திய வழக்கறிஞர் சினிமா துறையில் எவ்வளவு வட்டிக்கு கடன் வாங்கப்படுகிறது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஷால் மாதம் 1 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதாகச் சொன்னார். மேலும் விஷால், லைகாவுக்கு எதிராக தொடர்ந்த ஜி.எஸ்.டி. தொடர்பான வழக்கு தொடர்பான கேள்விகளும் எழுப்பப்பட்டன.
மொத்தம் இரண்டு நாள் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் விஷாலிடம் 150 கேள்விகள் எழுப்பப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கு விஷால் பதிலளித்திருந்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் லைகா நிறுவனத்திற்கு விஷால் 30 சதவீத வட்டியுடன் ரூ.21.29 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)