vishal hari movie rathnam movie release update

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்தது. தூத்துக்குடியில், குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக அப்பகுதி மக்கள் சொன்ன பிறகு, உடனே 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார் விஷால். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

பின்பு அடுத்தகட்ட படப்பிடிப்புகள் திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இதனிடையே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில் படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்ததாக விஷால் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் விக்ரம் - பா. ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் தங்கலான்வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.