ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ள விஷால், அதன் ரிலீஸுக்கு காத்திருக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்திற்காக கைகோர்த்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' நிறுவனமும் ஜீ ஸ்டாடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் போடப்பட்ட நிலையில் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. கதாநாயகியாக பிரியா பவனி ஷங்கர் கமிட்டாகியுள்ளதாகத்தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காமராஜர் பிறந்தநாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மாஸ் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகிறது. இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம். இயக்குநர் ஹரியுடன் என்னுடைய 3வது கூட்டணி. முன்பு இருந்த அதே மேஜிக்கை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இது ஒரு சிறப்பு விருந்தாக அமையும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.