/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishal-thuparivalan_0.jpg)
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் 'துப்பறிவாளன்'. இந்தப் படம் வெற்றியடைந்ததை அடுத்து, கடந்த வருடம் 'துப்பறிவாளன் -2' படம் தொடங்கப்பட்டது.
'துப்பறிவாளன் 2' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு விஷால்- மிஷ்கின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, மிஷ்கின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் அந்தப் படத்தை தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார். அதுமட்டும் இல்லாமல், மிஷ்கின் பெயர் இல்லாமலேயே படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஷால் வெளியிட்டார்.
ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதற்கு முன்பு, மிஷ்கினை மறைமுகமாகச் சாடி விஷால் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் "கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தைத்தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குனர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். இதே போல் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இயக்குநர் மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, 'சக்ரா' படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் நடிகர் விஷால். கரோனா அச்சுறுத்தலால் அதுவும் தடையானது. தற்போது ஷூட்டிங்கிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து 'சக்ரா' படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பையும் விஷால் முடிக்கவுள்ளார். இதனால் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
நவம்பர் 9ஆம் தேதி முதல் விஷால் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' உருவாகவுள்ளது. இதில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான காட்சிகளும் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதில் அஷ்யா, ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடிக்கவுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)