
நடிகர் விஷால், 2016ஆம் ஆண்டு 'மருது' திரைப்பட தயாரிப்புக்காக கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், தயாரிப்பு நிறுவனமான லைகாவை அணுகி தன் கடனை அன்புச்செழியனுக்கு செட்டில் செய்யுமாறு கோரியுள்ளார். அதன்படி லைகா நிறுவனமும் விஷாலின் கடனை அடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நடிகர் விஷால் லைகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். அதன்படி, தன்னுடைய கடனைச் செலுத்தியதற்காக லைகாவுக்கு 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் தவணை முறையில் செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 'துப்பறிவாளன் 2' திரைப்படம் வெளியான பின், 2020 மார்ச் சமயத்தில்7 கோடியும், மீதத் தொகையை 2020 டிசம்பர் மாதத்திற்குள் செலுத்திவிடுவதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் அளிக்கவில்லை எனவும், மொத்தமாக 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாயை வழங்க விஷாலுக்கு உத்தரவிடக் கோரியும் லைகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், “'துப்பறிவாளன் 2' படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையைத் திருப்பி வாங்குவதாக லைகா ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளது பொருந்தாது” எனத் தெரிவித்து, லைகாவின் மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், விஷாலுக்கு எதிரான வழக்கில் விஷாலுக்கு கொடுக்குமாறுலைகா நிறுவனத்திற்கு கோர்ட் விதித்த 5 லட்சம் அபராத தொகையை, நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் மாணவர்களின் படிப்பு செலவுக்கு முழுமையாக வழங்குவதாக கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)