தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் முடித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிரடியாக அறிவித்திருந்தார். மேலும் புதிய கட்டடத்தில்தான் தன்னுடைய திருமணம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.  

Advertisment

இதையடுத்து கட்டட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் முடிந்த பாடில்லை. இதனால் விஷால் திருமணமும் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. இந்த சூழலில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனிஷா அல்லா ரெட்டி என்பவரை விஷால் காதலிப்பதாக அறிவிப்பு வெளியானது. அனிஷா அல்லா ரெட்டி, அர்ஜூன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். பின்பு விஷாலுக்கும் அனிஷாவுக்கும் அதே 2019ஆம் ஆண்டு மார்ச்சில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் இந்த நிச்சயதார்த்தம் கல்யாணம் வரை செல்லவில்லை. இருவரும் பிரிந்தனர். இதையடுத்து விஷால் திருமணம் குறித்த தகவல்கள் பெரிதாக வெளியாகவில்லை. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூனில் சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக விஷால் அறிவித்தார். மேலும் தனது பிறந்தநாளான இன்று சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். சங்க கட்டட பணிகளும் நிறைவை நோக்கி வேகமெடுத்தன. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கட்டட திறப்பு விழா இருக்குமெனவும் அந்த கட்டடத்தில் விஷால் திருமணம் அவரது பிறந்தநாளான இன்று இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டட திறப்பு விழா தள்ளி போக கல்யாணமும் தள்ளிப் போனது. இருப்பினும் பிறந்தநாள் அன்று நல்ல செய்து வரும் எனக் கூறியிருந்தார். 

இந்த நிலையில் விஷால் சொன்னது போல் இன்று அந்த நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். அவருக்கும் சாய் தன்ஷிகா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளார். இதில் மணமக்களின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து விஷால் - சாய் தன்ஷிகா தம்பதிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.