நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், இன்று பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி வழக்கம் போல் முதியோர் இல்லத்தில் இன்று காலை உணவு வழங்கி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியின் 50 ஆண்டு கால பாராட்டு விழா தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது, “ஒரு நடிகர் 50 வருடமாக திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக இருப்பது உலக சாதனை. அந்த மேதாவிக்கு கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும். இப்போது சங்க கட்டம் வேலையில் பிஸியாக இருப்பதால், ரஜினி விழா குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்றார். பின்பு திருமணம் தொடர்பான கேள்விக்கு, “மதியம் 12.30 மணிக்கு நல்ல செய்தி வரும்” என்றார்.

Advertisment

அதன்படி மதியம், சாய் தன்ஷிகாவை நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக விஷால் அறிவித்தார். எளிய முறையில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் விஷால் அறிவித்திருந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இதுதான் நான் பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள். கட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும். அது முடிந்ததும் அடுத்த முகூர்த்தத்தில் என் கல்யாணம் இந்த கட்டடத்தில் நடக்கும். கடவுள் அனுப்பிய தேவதை தன்ஷிகா. கல்யாணத்துக்கு பிறகும் காதல் காட்சிகளில் நடிப்பேன். காதலும் சண்டை காட்சிகள் இல்லாமல் எந்த படமும் இருக்காது. ஆனால் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்” என்றார். அவர் இப்போது மகுடம் என்ற தலைப்பில் ரவியரசு இயக்கத்தில் நடித்து வருகிறார்.